முதல்வரை வீட்டிற்கு அனுப்புவோம்: போட்டா - ஜியோ எச்சரிக்கை
முதல்வரை வீட்டிற்கு அனுப்புவோம்: போட்டா - ஜியோ எச்சரிக்கை
UPDATED : ஏப் 28, 2025 12:00 AM
ADDED : ஏப் 28, 2025 12:40 PM
சென்னை:
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பான போட்டா - ஜியோ சார்பில், சென்னையில் சமீபத்தில் தர்ணா போராட்டம் நடந்தது.
எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடந்த போராட்டத்திற்கு, கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அமிர்தகுமார் தலைமை வகித்தார். போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள், கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
போராட்ட களமான தமிழகம்
போராட்டம் குறித்து அமிர்தகுமார் அளித்த பேட்டி:
தற்போது தமிழகம் முழுதும், அரசுக்கு எதிராக நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கும், போராட்டத்திற்கும் முதல்வர் தான் காரணம்.
கடந்த 2021 தேர்தலில், தி.மு.க., அளித்த வாக்குறுதிகளில், பெரும்பாலானவை நிறைவேற்றப்படாமல் இருப்பதே, தற்போது, தமிழகம் போராட்ட களமாக மாறக் காரணம்.
கடந்த நான்கு ஆண்டுகளில், பலகட்ட போராட்டங்களை, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நடத்தி உள்ளோம். அமைச்சர்களையும், அதிகாரிகளையும் பலமுறை நேரில் சந்தித்து பேசியுள்ளோம்.
எனினும், எங்களது நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. ஒவ்வொரு சந்திப்பின் போதும், உங்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்; பரிசீலனையில் உள்ளது என்று கூறியே, நான்கு ஆண்டுகளை தாண்டி விட்டனர்.
தற்போது, அரசு ஊழியர்கள், மன நிம்மதியின்றி பணியாற்றி வருகிறோம். பழைய ஓய்வூதியம், 21 மாத கால சரண் விடுப்பு, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் என, திரும்பும் திசையெல்லாம், எங்களுக்கு பிரச்னையாக மட்டுமே உள்ளது.
சரண் விடுப்பு தொகை
எனவே, முதல்வர் எங்கள் பிரதான கோரிக்கையான, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதோடு, 21 மாத கால சரண் விடுப்பு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
இல்லையெனில், பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற பாணியில், முதல்வரை வீட்டிற்கு அனுப்பி விடுவோம். வரும் சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைப்பதா, வேண்டாமா என்பதை முதல்வரே தீர்மானிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

