UPDATED : நவ 19, 2025 05:55 PM
ADDED : நவ 19, 2025 05:56 PM
புதுடில்லி:
இணைய உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு நிறுவனமான, 'கிளவுட்பிளேர்' நேற்று செயலிழந்ததால், 'எக்ஸ்' சமூக வலைதளம் மற்றும் 'சாட்ஜிபிடி' எனப்படும், ஏ.ஐ., தளம் ஆகியவை நேற்று பல மணி நேரங்களுக்கு முடங்கின.
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனம், 'கிளவுட்பிளேர்'. இது பெரிய இணையதளங்கள் மற்றும் 'ஆன்லைன்' சேவைகள் வேகமாகவும், பாதுகாப்பாகவும் இயங்க உதவுகிறது. இந்நிறுவனத்தின் சேவையை, எக்ஸ் சமூக வலைதளம் மற்றும் சாட்ஜிபிடி உள்ளிட்ட தளங்கள் பயன்படுத்துகின்றன.
இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று மாலை 5:00 மணிக்கு கிளவுட்பிளேர் தளத்தின் சர்வர்களில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் சாட்ஜிபிடி மற்றும் எக்ஸ் இணைய தளங்களை அணுக முயன்றவர்களுக்கு, 'சிக்கல் உள்ளதால் சில நிமிடங் களுக்கு பின் முயற்சிக்கவும்' என்ற செய்தியே காட்டப்பட்டது. பல மணி நேரங்களுக்கு பின் இந்த பிரச்னை படிப்படியாக சீரடைந்தது.
இது குறித்து கிளவுட்பிளேர் வெளியிட்ட அறிக்கையில், 'பிரச்னை குறித்து அறிந்துள்ளோம். அதை சரிசெய்ய நிபுணர்களை முடுக்கிவிட்டோம். அவர்கள் சிக்கலை சரிசெய்துள்ளனர். அதற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது' குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில், 'அமேசான் வெப் சர்வீசஸ்' எனப்படும், இணைய சேவைக்கு, தொழில்நுட்ப ஆதரவு வழங்கும் நிறுவனத்தின் தரவு மையத்தில் ஏற்பட்ட சிக்கலால், 'அமேசான், வாட்ஸாப்' உள்ளிட்ட செயலிகள் முடங்கின.

