UPDATED : ஜூன் 08, 2024 12:00 AM
ADDED : ஜூன் 08, 2024 10:54 AM
நாமக்கல்:
கிரீன் பார்க் நீட் பயிற்சி மையத்தில் படித்த நான்கு மாணவ - மாணவியர், நீட் தேர்வில், 720க்கு 720 மதிப்பெண் பெற்று, அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, நாடு முழுதும் தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ., சார்பில், மே 5ல் நடத்தப்பட்டது.
இந்த தேர்வு முடிவுகள், வரும் 14ல் வெளியிடப்படும் என, தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், 10 நாட்கள் முன்னதாக, நேற்று முன்தினம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் நீட் தேர்வு, 11 மையங்களில், 6,180 மாணவ - மாணவியர் எழுதினர். இதில், நாமக்கல், கிரீன் பார்க் நீட் பயிற்சி மையத்தில் படித்து தேர்வு எழுதிய மாணவர்கள் ரஜனீஷ், ரோஹித், சபரீசன், ஜெயந்தி பூர்வஜா ஆகிய நான்கு பேர், 720-க்கு 720 மதிப்பெண் பெற்று, அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மேலப்பாளையம்
ஏழாவது முறையாக நீட் தேர்வில் பாளை மாணவர் சாதித்து காட்டியுள்ளார். மேலப்பாளையம், அத்தியடி கீழத் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான்; கூலித் தொழிலாளி. இவரின் மனைவி செய்யது அலி பாத்திமா. இவர்களின் இரண்டாவது மகன் முகமது பைசல்.
கடந்த 2018ம் -ஆண்டு, மேலப்பாளையம் கோல்டன் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்தார்.
அந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் பங்கேற்ற இவர், 71 மதிப்பெண் தான் எடுத்தார். தொடர்ந்து, மனம் தளராத விக்கிரமாதித்தன் போல, இந்த ஆண்டு ஏழாவது முறையாக நீட் தேர்வு எழுதினார்.
அதில், 720க்கு 603 மார்க் பெற்று டாக்டராகும் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்த மாணவனை, பள்ளி முதல்வர் ஜெசிந்தா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.
ஈரோடு
நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து, மாநிலத்தில் உள்ள 39 அரசு மாதிரி பள்ளிகளில் முதலிடம் பிடித்து, ஈரோடு மாணவன் சாதனை படைத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள ஈரோடு மாவட்ட அரசு மாதிரிப்பள்ளி மாணவன் எஸ்.உதயகுமார், 720க்கு 569 மதிப்பெண் எடுத்து, மாநிலத்தில் உள்ள 39 அரசு மாதிரி பள்ளிகளில் முதலிடம் பிடித்து, சாதனை படைத்துள்ளார்.
மாணவன் உதயகுமாருக்கு, பள்ளி தலைமையாசிரியர் விஜயன் வாழ்த்து தெரிவித்தார்.
- நமது நிருபர் குழு -