UPDATED : மே 01, 2024 12:00 AM
ADDED : மே 01, 2024 09:57 PM
திருப்பூர்:
தேசிய தேர்வு முகமை சார்பில், மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, மே, 5ம் தேதி நடக்கிறது. நாடு முழுவதும், 24 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். மதியம், 2:00 மணிக்கு துவங்கி, மாலை 5:20 மணி வரை நடக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில், நான்கு தேர்வு மையங்களில், 2,619 மாணவர் தேர்வு எழுதுகின்றனர். கே.எம்.சி., பப்ளிக் பள்ளி - 507 பேர், ஏ.வி.பி., கல்லுாரி - 720 பேர், லிட்டில் கிங்டம் பள்ளி - 672 பேர், வித்யாசாகர் பப்ளிக் பள்ளி - 720 பேர் என, 2,619 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.
நீட் தேர்வு மையங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரான, பெருமாநல்லுார் கே.எம்.சி பப்ளிக் பள்ளியின் மனோகரன், ஏற்பாடுகளை செய்து வருகிறார். தேர்வுகள் சிறப்பான முறையில் நடக்க, தடையில்லா மின்சாரம், மருத்துவக்குழு, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதி செய்யப்பட்டுள்ளது. போதிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, எஸ்.பி., அபிேஷக் குப்தா ஆகியோரிடமும் ஆலோசனை நடத்தினர். தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து, நேற்று தேர்வு மையங்களில் ஆய்வு நடந்தது. பெற்றோர் காத்திருப்பு பகுதி, பார்க்கிங் வசதி, உணவு, குடிநீர் போன்ற அத்தியவாசிய வசதி செய்துள்ளது உறுதி செய்யப்பட்டது.
நீட் ஒருங்கிணைப்பாளர் மனோகரன், திருப்பூர் வித்யாசாகர் பள்ளியின், நீட் தேர்வு மைய கண்காணிப்பாளர் சசிகலா, திருப்பூர் லிட்டில் கிங்டம் பள்ளியின் நீட் தேர்வு மைய கண்காணிப்பாளர் ரேணு, போலீசாருடன் சென்று ஆய்வு நடத்தினர்.