ரூ.400 கோடியில் ஐ.ஐ.டி., வளாகத்தில் மாணவர் இல்லம்: 1,800 பேர் தங்கலாம் 'எலிவேட் கேம்பசஸ்' நிறுவனம் திட்டம்
ரூ.400 கோடியில் ஐ.ஐ.டி., வளாகத்தில் மாணவர் இல்லம்: 1,800 பேர் தங்கலாம் 'எலிவேட் கேம்பசஸ்' நிறுவனம் திட்டம்
UPDATED : ஜூன் 29, 2026 01:07 PM
ADDED : ஜூன் 29, 2026 01:08 PM
சென்னை:
சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் தனியார் பங்களிப்புடன், 1,800 பேர் தங்கும் வகையில், 400 கோடி ரூபாயில் மாணவர் இல்லம் கட்டப்பட உள்ளது.
கிண்டியில் உள்ள சென்னை ஐ.ஐ.டி., வளாகம், 620 ஏக்கர் பரப்பளவில், செயல்பட்டு வருகிறது. நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான இதில் பயில, மாணவ மாணவியர் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இங்கு மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் பிரிவு வாரியாக, 21 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட ஆண்டுகள் கடந்த நிலையில் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு, கூடுதல் இடவசதியுடன் புதிய விடுதிகள் கட்டப்படுகின்றன.
இந்நிலையில், ரியல் எஸ்டேட் துறையில் புதிய முன்னேற்றமாக 'ஸ்டூடண்ட் ஹவுசிங்' என்ற பெயரில் மாணவர் இல்லம் கட்டும் திட்டத்தை, மும்பையைச் சேர்ந்த 'எலிவேட் கேம்பசஸ்' என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது.
இந்நிறுவனம் சிங்கப்பூரைச் சேர்ந்த, 'ஹில் ஹவுஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ்' என்ற நிறுவனத்துடன் இணைந்து மாணவர் இல்லம் கட்டும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில், 3.5 ஏக்கர் நிலத்தில், 400 கோடி ரூபாயில் மாணவர் இல்லம் கட்டப்பட உள்ளது. இதில், ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள், திட்ட அலுவலர்கள் என, 1,800 பேர் தங்கும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்படும். கட்டுமான பணிகள் முடித்து மாணவர் இல்லம், 2028ல் பயன்பாட்டுக்கு வரும்.
இந்த வளாகம், 30 ஆண்டுகள் கட்டுமான நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். பின், ஐ.ஐ.டி., நிர்வாகத்திடம் எவ்வித கட்டணமும் பெறாமல் ஒப்படைக்கப்படும்.
இதற்காக சென்னை ஐ.ஐ.டி., நிர்வாகம், எலிவேட் கேம்பசஸ் நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, 'எலிவேட் கேம்பசஸ்' நிறுவனம் மும்பையில் வெளியிட்டுள்ளது.
