UPDATED : மார் 06, 2025 12:00 AM
ADDED : மார் 06, 2025 08:00 PM

புதுடில்லி:
பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்த 42,000 பேருக்கு தனியார் பள்ளிகளில் சேர்க்கை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் ஆசிஷ் சூட் கூறினார்.
இதுகுறித்து, ஆசிஷ் சூட் கூறியதாவது:
பள்ளி மாணவர் சேர்க்கையில் இந்த ஆண்டு முதல்வர் ரேகா குப்தா வழிகாட்டுதல்படி வெளிப்படைத் தன்மை கடைப்பிடிக்கப்படுகிறது. பெற்றோர் மற்றும் ஊடகங்கள் முன்னிலையில் குலுக்கல் நடத்தி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான ஆண்டு வருமான வரம்பு 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. இதனால், பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த ஏராளமான குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் சேர்க்கை கிடைக்கும்.
நர்சரி வகுப்புக்கு மொத்தம் உள்ள 24,933 இடங்களுக்கு 1,00,854 பேர் விண்ணப்பித்து இருந்தனர். மழலையர் வகுப்புக்கு 4,682 இடங்களுக்கு 40,488 பேரும், முதலாம் வகுப்புக்கு 14,430 இடங்களுக்கு 62,598 பேரும் விண்ணப்பித்து இருந்தனர். குலுக்கல் முறையில் 42,000 மாணவர்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறப்புக் குழந்தைகள், திருநங்கையர் மற்றும் இதர பிரிவினரில் மொத்த இடங்களை விட குறைவானவர்களே விண்ணப்பித்து உள்ளனர். எனவே, இந்தப் பிரிவுகளில் மட்டும் பதிவு செய்யும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.