44 நிகர்நிலை பல்கலைகள் மீது நடவடிக்கை: கபில் சிபல் உறுதி
44 நிகர்நிலை பல்கலைகள் மீது நடவடிக்கை: கபில் சிபல் உறுதி
UPDATED : ஜன 15, 2010 12:00 AM
ADDED : ஜன 15, 2010 12:54 PM
அரசியல்வாதிகள் உட்பட பணம் படைத்த சிலர் நடத்தி வரும் பல்கலைக்கழகங்கள் நிகர்நிலை அந்தஸ்து பெற்ற பின்னரும் அதற்கான கல்வித் தரத்தைப் பராமரிக்காமல் ஏனோதானோ என்று இயங்கி வருகின்றன.
இவற்றில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி விடும் அவலம் பல காலமாக நிலவுகிறது. இந்நிலையில், நிகர்நிலை அந் தஸ்து பெற்றும் கூட அதை முறையாகப் பராமரிக்காமல் நடத்தப்பட்டு வரும் 44 பல்கலைக்கழகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. சமீபத்தில் மத்திய மனிதவளத் துறை அமைச்சர் கபில் சிபல், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்தைச் சந்தித்தார். இந்தக் கடுமையான நடவடிக்கைகளுக்கு கோபால் சுப்பிரமணியம் அனுமதி அளித்துவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.இது குறித்து, விரைவில் பிரதமரை சந்தித்து நிலவரத்தை விளக்க இருக்கிறார் கபில் சிபல். பல்வேறு பல்கலைக்கழகங்களை அரசியல்வாதிகள் நடத்தி வருவதால், நடவடிக்கைகளில் பின்னடைவு ஏதும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக முன்னேற்பாடாக கபில் சிபல், பிரதமரைச் சந்திப்பார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்காக, எய்ம்ஸ் நிறுவனத்தின் தாண்டன், இந்திய அறிவியல் கழகத்தின் கோவர்த்தன் மேத்தா, கான்பூர் ஐ.ஐ.டி.,யின் சேர்மன் அனந்தகிருஷ்ணன், வடகிழக்கு மலைப் பகுதி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மிருணாள் மிரி ஆகியோர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இக்குழு, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 44 பல்கலைக்கழகங்களின் அனுமதியை ரத்து செய்யக் கூடும். மேலும் நிகர்நிலை அந்தஸ்து பல்கலைக்கழகங்கள் குறித்த சில கடுமையான விதிகளைப் பரிந்துரை செய் யும். இதுபோன்ற கல்வித் தரத்தில் குறைவான நிகர்நிலை அந்தஸ்து பெற்ற பல்கலைக்கழகங்கள் தமிழகத்திலும் கர்நாடகத்திலும் அதிகமாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
