497 மதிப்பெண் பெற்ற விசைத்தறியாளர் மகள்: அரசுப்பள்ளி மாணவி சாதனை!
497 மதிப்பெண் பெற்ற விசைத்தறியாளர் மகள்: அரசுப்பள்ளி மாணவி சாதனை!
UPDATED : மே 21, 2026 12:16 PM
ADDED : மே 21, 2026 12:17 PM
அவிநாசி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், அவிநாசி அருகே அரசு பள்ளி மாணவி அனுஸ்ரீ, 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் சாதனை படைத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த கருக்கன்காட்டுப்புதுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 63 மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். அனைவரும் தேர்ச்சி பெற்று பள்ளி, 100 சதவீத தேர்ச்சியை பெற்று சாதித்துள்ளது.
இப்பள்ளி மணவி, அனுஸ்ரீ தமிழ் - 99, ஆங்கிலம் - 99, கணிதம் - 100, அறிவியல் - 99 மற்றும் சமூக அறிவியல் - 100 என 500க்கு 497 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார்.
மாணவி அனுஸ்ரீக்கு, தலைமையாசிரியை அனிதா (பொறுப்பு), ஆசிரியர்கள் வெங்கடேஸ்வரி, கோகிலவாணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வரதராஜன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கலைச்செல்வி ஆகியோர் இனிப்பு வழங்கி பாராட்டினார்.
அனுஸ்ரீயின் தந்தை செல்லமுத்து, விசைத்தறி கூடம் நடத்தி வருகிறார். தாயார் மோகனாம்பாள், இல்லத்தரசி. தம்பி முகிலன், துலுக்கமுத்துாரிலுள்ள அரசு ஆரம்ப பள்ளியில், ஆறாம் வகுப்பு படிக்கிறார்.
மாணவியின் சாதனை குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், “மாணவி அனுஸ்ரீ ஆறாம் வகுப்பிலிருந்து மிக நன்றாக பாடத்தை நுணுக்கமாக கவனித்து தேர்வு எழுதுவதில் திறமைசாலியாக இருந்தார். எட்டு, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு ஆகிய, 3 வகுப்புகளிலும் திறனறிவு தேர்வில் முதலிடம் பெற்றார். எங்கள் பள்ளி மாணவி ஒருவர் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றனர்.
அனுஸ்ரீ கூறுகையில், “அதிக மதிப்பெண் பெற்றதற்கு ஆசிரியர்களின் ஊக்குவிப்பும், பெற்றோரின் ஆதரவும் தான் காரணம். நான் நன்றாக படித்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவதே எனது லட்சியம். அதற்காக முழு முயற்சி எடுப்பேன்,” என்றார்.
