UPDATED : செப் 14, 2011 12:00 AM
ADDED : செப் 14, 2011 10:11 AM
அண்ணா பல்கலைக் கழகம் என, ஐந்து ஊர்களில் தனித்தனியாக இயங்கி வந்த குழப்பத்திற்கு இதன் மூலம் தீர்வு ஏற்பட்டுள்ளது. .
முந்தைய தி.மு.க., ஆட்சியில், நிர்வாக வசதிக்காக எனக் கூறி, அண்ணா பல்கலைக் கழகத்தை பிரித்து, சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய ஐந்து இடங்களில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகங்களை ஏற்படுத்தினர். 500 தனியார் பொறியியல் கல்லூரிகளை, ஐந்து பல்கலைக் கழகங்களுக்கும் பிரித்து, நிர்வாகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டன.
தனி பல்கலைகளை உருவாக்கியபோதும், அதற்கென முழுமையான உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தவில்லை என்றும், சென்னை அண்ணா பல்கலையின் தரத்தை, புதிய பல்கலைகள் கொண்டிருக்கவில்லை என்றும், ஆரம்பத்தில் இருந்தே கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன.
சட்டசபை தேர்தலின்போது, இந்த பிரச்னைகளை கோடிட்டுக் காட்டி, புதிதாக ஏற்படுத்தப்பட்ட அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகங்கள், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படும் என, அ.தி.மு.க., அறிவித்தது.
அதன்படி, ஆட்சி பொறுப்பேற்ற பின் கவர்னர் உரையிலும், பட்ஜெட்டிலும் அண்ணா பல்கலைக் கழகங்கள் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, ஐந்து அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகங்களை, பழையபடி சென்னை அண்ணா பல்கலையுடன் இணைப்பதற்கு வழி வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார்.
இந்த சட்ட திருத்த மசோதாவில், ஐந்து அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகங்களை, சென்னை அண்ணா பல்கலையுடன் இணைப்பதற்கு வழிவகை செய்துள்ளதுடன், சென்னை அண்ணா பல்கலை துணைவேந்தர் மற்றும் ஐந்து பல்கலைக் கழகங்களில் தற்போது பதவி வகித்து வரும் துணை வேந்தர்கள், பதிவாளர்கள் உட்பட, இதர நிர்வாக அலுவலர்களை பதவியிழக்கச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சட்ட திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:
நிர்வாக வசதிக்காக, சென்னை அண்ணா பல்கலையை பிரித்து, சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி ஆகிய ஐந்து இடங்களில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகங்கள் ஏற்படுத்தப்பட்டன. 2006ல் இருந்து, படிப்படியாக இந்த பல்கலைக் கழகங்கள் ஏற்படுத்தப்பட்டன. எனினும், கடந்த நான்கு ஆண்டு அனுபவ அடிப்படையில், இந்த பல்கலைக் கழகங்களில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அண்ணா பல்கலைக் கழகத்தின் பெயரிலேயே பல பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டதால், குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு பல்கலையும், அவைகளுக்கென தனி பாடத் திட்டங்களை பின்பற்றுவதால் மாணவர்களுக்கு, பாடத் திட்டம் மற்றும் கற்பதில் ஒரு சீரான நிலை இல்லாமல் உள்ளது.
மாணவர்களின் திறமையை மதிப்பீடு செய்ய, ஒவ்வொரு பல்கலையும் ஒவ்வொரு விதமான நடைமுறையை பின்பற்றுவதால், மாணவர்களின் திறமையை ஆய்வு செய்வதில் பெருமளவில் வேறுபாடுகள் நிலவுகின்றன. இந்த பிரச்னைகளை களைய அமைக்கப்பட்ட குழுவாலும், உரிய தீர்வை கண்டறிய முடியவில்லை.
திருச்சி அண்ணா தொழில்நுட்ப பல்கலையைத் தவிர, இதர பல்கலைகளில் முழுமையான உள் கட்டமைப்பு வசதிகள் இல்லை. அண்ணா பல்கலைக் கழகத்தை, பல்வேறு இடங்களில் துவங்கியதால், சென்னை அண்ணா பல்கலைக் கழகம் வலுவிழந்துவிட்டது. இதுபோன்ற காரணங்களால், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர அரசு முடிவெடுத்துள்ளது.
பல்கலைக் கழகங்களை சீரமைத்து, உலகத்தரமிக்க நிறுவனங்களாக மாற்றி அமைக்க, தமிழக அரசு சிறப்புத் திட்டம் ஒன்றை செயல்படுத்தும். இதற்கேற்ப, அண்ணா பல்கலைக் கழக சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சட்ட திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மசோதா மீது, இன்று விவாதம் நடத்தப்பட்டு, அதன்பின் நிறைவேற்றப்படும்.
