UPDATED : நவ 25, 2024 12:00 AM
ADDED : நவ 25, 2024 10:17 AM
நாகப்பட்டினம்:
நாகையில், உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று அசத்திய, ஐந்து மாத குழந்தையை பெற்றோருடன் அழைத்து கலெக்டர் பாராட்டினார்.
நாகை மாவட்டம், திருப்பூண்டி காரை நகரை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார் -சுபஸ்ரீ தம்பதி. இருவரும் பட்டதாரிகள். சதீஷ்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு கடந்த ஜூன் 3ம் தேதி பிறந்த பெண் குழந்தைக்கு ஆதிரை என பெயரிட்டனர்.
இக் குழந்தை ஒரு மாதத்தில் இருந்து பெற்றோர் பேசுவதை உன்னிப்பாக கவனித்து வந்துள்ளது. குழந்தையிடம் ஏதோ ஒரு திறன் உள்ளதையறிந்த தாய் சுபஸ்ரீ, 3 மாதத்திற்கு பின் கருப்பு, வெள்ளை நிற அட்டைகளை காட்டி பயிற்சி அளித்துள்ளார்.
நிறங்களை அடையாளம் கண்ட குழந்தையின் திறமையை கண்டு வியந்த சுபஸ்ரீ, பழங்கள், விலங்குகள், எண்கள், எழுத்துக்கள், நாடுகளின் தேசியக் கொடி, அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை காட்டி பயிற்சி அளித்தார்.
அதன் பலனாக, அட்டையில் உள்ள புகைப்படத்தின் பெயரை சுபஸ்ரீ சொன்னதும், அதனை குழந்தை துல்லியமாக விரல் வைத்து அடையாளம் காட்டியது. நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் என்ற நிறுவனத்தை தொடர்பு கொண்டு தன் குழந்தையின் திறமையை சுபஸ்ரீ தெரிவித்தார்.
குழந்தையின் திறமையை ரெக்கார்ட் நிறுவனத்தினர் கடந்த மாதம் சோதித்தனர். பழங்கள், பறவைகள், எண்கள், காய்கறிகள், தேசிய கொடிகள், நிறங்கள், அரசியல் தலைவர்களின் படங்கள் என 200 அட்டைகளில் இருந்தவற்றை அடையாளம் காட்டி அசத்தியது குழந்தை.
இதையடுத்து நோபல் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனத்தினர், குழந்தையின் திறமையை அங்கீகரித்து கேடயம், சான்றிதழை வழங்கியதோடு, குழந்தை ஆதிரையின் உலக சாதனையை புத்தகத்தில் வெளியிட்டுள்ளனர்.
சாதனை புரிவதற்கு வயது ஒரு தடையில்லை என நிரூபித்த குழந்தை ஆதிரை குடும்பத்தினரை, கலெக்டர் ஆகாஷ் பாராட்டி, வாழ்த்தினார்.