எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு தேர்வான 51 வயது நபர்: நீட் நுழைவுத்தேர்வே காரணம் என பெருமிதம்
எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு தேர்வான 51 வயது நபர்: நீட் நுழைவுத்தேர்வே காரணம் என பெருமிதம்
UPDATED : ஆக 17, 2026 10:23 AM
ADDED : ஆக 17, 2026 10:24 AM
சென்னை:
“நீட் தேர்வு வாயிலாக, 51 வயதிலும் எம்.பி.பி.எஸ்., படிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளேன்,” என, சுரேஷ்குமார் தெரிவித்தார்.
அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், 7,157 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 1,383 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கு, 2026 - 27ம் கல்வியாண்டுக்கான மருத்துவ படிப்புகளில் சேர, 72,627 மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
அதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கிறது. சிறப்பு பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்கு, சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் கலந்தாய்வு நடந்தது. இதில், விளையாட்டு பிரிவில், 280 பேர் விண்ணப்பித்த நிலையில், 13 எம்.பி.பி.எஸ்., 2 பி.டி.எஸ்., பல் மருத்துவ படிப்புக்கான இடங்கள் நிரம்பின.
விண்ணப்பம்
மேலும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில், 224 இடங்கள் இருக்கும் நிலையில், 108 பேர் தான் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த பிரிவில், நாகை மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ்குமார், 51 வயதில் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான சேர்க்கை ஆணையை பெற்றார்.
அத்துடன், அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத ஒதுக்கீட்டில், 3,806 பேர் விண்ணப்பித்த நிலையில், 614 இடங்கள் நிரம்பின. இடங்கள் பெற்றவர்களுக்கு, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ், சேர்க்கை ஆணைகளை வழங்கினார்.
தனியார் நிறுவனம்
எம்.பி.பி.எஸ்., படிக்கப் போகும் சுரேஷ்குமார் கூறியதாவது:
மருத்துவம் படிக்க வேண்டும் என்பது, என் கனவாக இருந்தது. அந்த கனவு, 'நீட்' தேர்வு வந்ததன் வாயிலாக சாத்தியமாகி உள்ளது. தமிழ் வழியில் படித்த நான், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன்.
என் இரண்டு மகன்களும் பள்ளிகளில் படித்து வருகின்றனர். அவர்களுக்கும் உந்துதலை கொடுக்கும் வகையில் படித்து, 'நீட்' தேர்வில், 192 மதிப்பெண் பெற்று, சிறப்பு பிரிவில் எம்.பி.பி.எஸ்., இடத்தை பிடித்தேன். என் மனைவி பக்கபலமாக இருக்கிறார். குடும்பத்தை பார்த்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.
மகன்களின் படிப்புக்கான தேவைகளையும் தயாராக வைத்து விட்டுத்தான், இம்முடிவை எடுத்தேன். தற்போது என் நீண்டநாள் கனவு, 'நீட்' தேர்வு வாயிலாக சாத்தியமாகி உள்ளது. என் சொந்த மாவட்டத்திலேயே மருத்துவம் படிப்பதால், நிச்சயம் டாக்டராவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இரட்டையருக்கு 'சீட்'
சேலம் மாவட்டத்தை சேர்ந்த நிகில் ஸ்ரீராம், நிக் ஷிதா ஆகியோர் இரட்டையர். அவர்கள், 'வுஷூ' தற்காப்பு கலை விளையாட்டு வீரர்கள். விளையாட்டு பிரிவு ஒதுக்கீட்டில் பங்கேற்ற அவர்களில் நிகில் ஸ்ரீராம், செங்கல்பட்டு மருத்துவ கல்லுாரியிலும், நிக் ஷிதா சேலம் மருத்துவ கல்லுாரியிலும் எம்.பி.பி.எஸ்., இடங்களை பெற்றனர்.
அவர்கள் கூறுகையில், 'எங்கள் குடும்பத்தில் பலர் மருத்துவ துறையில் பணியாற்றுகின்றனர். நாங்களும் மருத்துவம் படிக்க ஆசைப்பட்டோம். அதில் வெற்றி பெற்றுள்ளோம்,' என்றனர்.
