51,000 பேருக்கு வேலை ஆணை வழங்கி பிரதமர் மோடி பெருமிதம்
51,000 பேருக்கு வேலை ஆணை வழங்கி பிரதமர் மோடி பெருமிதம்
UPDATED : அக் 30, 2024 12:00 AM
ADDED : அக் 30, 2024 12:58 PM

புதுடில்லி:
நம் நாட்டில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க முடியாது என்ற முந்தைய அரசுகளின் மனநிலையை மாற்றினோம். இதன் வாயிலாக லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம் என, 51,000 பேருக்கு அரசு வேலைக்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
நாடு முழுதும், 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கும், வேலைவாய்ப்பு முகாம்களை மத்திய அரசு, 2022ல் துவக்கியது. இதுவரை, 7.50 லட்சம் பேருக்கு அரசு வேலைக்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, 51,000 பேருக்கு பணி ஆணைகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
இதில், பிரதமர் மோடியின் பேச்சு அடங்கிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது.
அதில் மோடி கூறியதாவது:
முந்தைய ஆட்சியில் கொள்கைகள் மற்றும் நோக்கங்களில் தெளிவு இல்லாமல் இருந்ததே, பல்வேறு வளர்ச்சி ஏற்படுத்தக்கூடிய துறைகளில் நம் நாடு பின்தங்கியிருந்ததற்கு காரணம். புதிய தொழில்நுட்பங்களை நம் நாட்டில் உருவாக்க முடியாது என்பது அவர்களது எண்ணமாக இருந்தது.
இதனால், பழைய மற்றும் தேவையில்லாத தொழில்நுட்பங்கள் நம் நாட்டின் மீது திணிக்கப்பட்டன.
முந்தைய அரசின் இந்த மனநிலையை நாங்கள் மாற்றினோம். நம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தோடு, பல திடமான முடிவுகளை, நடவடிக்கைகளை எடுத்தோம்.
அதிகமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதே இந்த அரசின் உறுதிப்பாடாக உள்ளது. இதற்கு உதவும் வகையிலேயே, நெடுஞ்சாலை, துறைமுகங்கள், விமான சேவை என உட்கட்டமைப்பு வசதிகளில் அதிக முதலீடு செய்தோம். இது வளர்ச்சியை மட்டுமல்ல; வேலை வாய்ப்புகளையும், புதிய வாய்ப்புகளையும் உருவாக்கி தந்துள்ளது.
தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் தற்போது களை கட்டத் துவங்கியுள்ளது. உத்தர பிரதேசம் அயோத்தியில், தன் கோவிலுக்குள் ராமர் வந்த பின் நடக்கும் முதல் தீபாவளி இது. இதற்காக பல தலைமுறைகளாக நாம் காத்திருந்தோம். தற்போதைய தலைமுறையினர் அதை கொண்டாடும் பெரும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
அரசு ஊழியர்களாக பணியில் சேரும் ஒவ்வொருவரும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். நாம் மக்களின் சேவகர்கள், ஆட்சியாளர்கள் அல்ல என்பதை புரிந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.