1ம் வகுப்பில் 5.26 லட்சம் மாணவர்கள்: சேர்க்கையில் தனியார் பள்ளிகள் 'டாப்'
1ம் வகுப்பில் 5.26 லட்சம் மாணவர்கள்: சேர்க்கையில் தனியார் பள்ளிகள் 'டாப்'
UPDATED : ஆக 29, 2025 12:00 AM
ADDED : ஆக 29, 2025 09:48 PM

நடப்பு கல்வியாண்டில், ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையில், 5.26 லட்சம் பேருடன், தனியார் பள்ளிகள் முன்னிலையில் உள்ள நிலையில், 2.39 லட்சம் மாணவர்களுடன் அரசு பள்ளிகள் பின்தங்கி உள்ளன.
தமிழகத்தில், 58,924 அரசு, தனியார் பள்ளிகளில், 1.21 கோடி மாணவ - மாணவியர் படிக்கின்றனர். ஆண்டுதோறும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிந்து வருகிறது.
அதிகரிப்பு அதிலும், பள்ளி சேர்க்கைக்கு அடித்தளமான, ஒன்றாம் வகுப்பு சேர்க்கையில் நடப்பு கல்வியாண்டில், 37,595 அரசு பள்ளிகளில், 2 லட்சத்து, 39,290 பேரும், 8,335 அரசு உதவி பெறும் பள்ளிகளில், 86,063 பேரும், 12,929 தனியார் பள்ளிகளில், 5 லட்சத்து, 26,052 பேரும் சேர்ந்துள்ளனர்.
இதில், அரசு பள்ளிகளை விட, தனியார் பள்ளிகளில், 2 லட் சத்து, 86,762 மாணவ - மாணவியர் கூடுதலாக சேர்ந்துள்ளனர். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்த்தால் கூட, 2 லட்சத்து, 699 பேர் கூடுதலாக தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
அரசு பள்ளிகளை விட, தனியார் பள்ளிகள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:
அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளமல்ல; பெருமையின் அடையாளம் என பள்ளிக்கல்வி துறை கூறி வருகிறது. அரசு பள்ளிகளின் நிலை, உண்மையிலேயே பெருமிதம் தரும் வகையில் இருக்கிறதா என்பது கேள்வியாகியிருக்கிறது.
கட்டமைப்பு தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்கள் அரசு நிதி உதவியுடன் மாணவர்களுக்கு ஒதுக்கப்படுவதால், அரசு பள்ளிகளில் சேர்க்கை குறைவதாக விமர்சனங்கள் உண்டு. அதே நேரம், தனியார் பள்ளிகளில் சேர்க்கை குறையவில்லை. தகுதி தேர்வு மூலம், அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் தேர் வு செய்யப்படுகின்றனர்.
இதுபோன்ற நடைமுறை இல்லாதபோதும், தனியார் பள்ளிகளில் நம்பிக்கையுடன் மாணவர்களை சேர்க்கின்றனர். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்பட்டன. ஆட்சி மாற்றத்திற்கு பின், கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர்.
தனியார் பள்ளிகளுக்கு நிகரான கட்டமைப்பு வசதிகளை அரசு பள்ளிகளில் ஏற்படுத்தி தந்தாலே, மாணவர்களின் எண்ணிக்கையை தக்கவைத்துக் கொள்ள முடியும்.
இவ்வாறு கூறினர்.