பள்ளிகளுக்கு வராத 5,662 மாணவர்கள்; கிராமம் கிராமமாக தேட கலெக்டர் உத்தரவு
பள்ளிகளுக்கு வராத 5,662 மாணவர்கள்; கிராமம் கிராமமாக தேட கலெக்டர் உத்தரவு
UPDATED : மே 16, 2024 12:00 AM
ADDED : மே 16, 2024 10:48 AM

கோவை:
கோவை மாவட்டம் முழுவதும் கிராமம் கிராமமாக சென்று, பள்ளிக்கு வராத 5,662 மாணவர்களை கண்டறிய வேண்டும். அவர்களிடமும், பெற்றோரிடம் பேசி, மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க வேண்டும் என, அரசு துறை அலுவலர்களுக்கு, கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.
கோவைமாவட்ட கல்வித்துறை சார்ந்த மூன்றடுக்கு குழு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், எஸ்.பி., பத்ரிநாராயணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:
கடந்த, 2023-24 கல்வியாண்டில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவியரும் உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்ய வேண்டும். நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத, பொதுத்தரவில் உள்ள, 5,662 குழந்தைகளை கிராமம் வாரியாக பெற்றோர் மற்றும் மாணவர்களை நேரடியாக சந்தித்து பேச வேண்டும்.
அவர்களுக்கு ஊக்கம் அளித்து, கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, பள்ளிக்கு வரவழைக்க வேண்டும்.
மேலும், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வருகை தராத மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.
இம்மாணவர்கள் துணைத்தேர்வு எழுதுவதற்கு தேவையான நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். மாணவ, மாணவியர் இடைநிற்றலை தவிர்த்து தொடர்ந்து கல்வி கற்க, துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.
இடைநிற்றல் அவர்களை சமூகத்துக்கு எதிரான செயல்கள் செய்யத் துாண்டும். போதைப்பொருளால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்வேதா, மாநகராட்சி துணை கமிஷனர் செல்வசுரபி, முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி மற்றும் சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சுகாதாரத்துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
- நமது நிருபர் -