6 மாதங்களாக நுாலகம் திறக்காததால் புத்தகங்களை நாசப்படுத்தும் எலிகள்
6 மாதங்களாக நுாலகம் திறக்காததால் புத்தகங்களை நாசப்படுத்தும் எலிகள்
UPDATED : மே 22, 2024 12:00 AM
ADDED : மே 22, 2024 10:27 AM
சென்னை:
பெரும்பாக்கம், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வளாகத்தில், மத்திய அரசின், லைட் ஹவுஸ் திட்டத்தில், 116 கோடி ரூபாயில், 1,152 வீடுகள் கட்டப்பட்டன.
அப்போது, 1,000 சதுர அடி பரப்பில், ஒரு நுாலகம் கட்டப்பட்டது. இங்கு, 3,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. 2022ம் ஆண்டு அக்., மாதம் பகுதி நேர நுாலகமாக, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் திறந்தது.
தினமும், காலை 9:00 முதல் 12:00 மணி வரை திறக்கப்பட்டது. நான்கு பேர் புரவலர்களாகவும், 260 பேர் உறுப்பினராகவும் சேர்ந்தனர். சில மாதங்கள் நுாலகம் திறக்கப்பட்டது.
கண்காணிப்பு அதிகாரிகள் ஆய்வு செய்யாதது, நுாலகத்திற்கு வாசகர்களை வரவழைக்க ஆர்வமில்லாதது, ஊதியம் வழங்காதது போன்ற காரணத்தால், ஆறு மாதங்களாக நுாலகம் திறக்கவில்லை.
இந்நிலையில், நுாலக வாசலில் குப்பை தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் உணவு தேடி இங்கு அலையும் எலி, பெருச்சாளி அதிகரித்து, நுாலகத்தில் புகுந்து புத்தகங்களை நாசமாக்குகின்றன.
வாசகர்கள் கூறியதாவது:
குடியிருப்பு பிளாக்குகளில் இருந்து, 20 முதல் 50 அடி துாரத்தில் நுாலகம் உள்ளது. வாசகர்களை வரவழைக்க, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த அரசு உத்தரவிட்டும், இங்கு செயல்படுத்தவில்லை.
உறுப்பினர்கள், புரவலர்கள் சேர்க்கையில் மட்டும் ஆர்வம் காட்டிய அதிகாரிகள், நுாலகத்தை முறையாக திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
கோடை விடுமுறையில் வாசிப்பு நிகழ்ச்சிகள் நடத்தி இருந்தால், வாசகர் வருகை அதிகரித்திருக்கும். நுாலகத்தை தினமும் திறக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தகங்கள் நாசமாவதை தடுத்து, வாரம் ஒரு முறையாவது அதிகாரிகள் ஆய்வு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.