மைசூரில் ரூ.600 கோடி முதலீடு; 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு
மைசூரில் ரூ.600 கோடி முதலீடு; 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு
UPDATED : ஆக 07, 2024 12:00 AM
ADDED : ஆக 07, 2024 08:26 PM
மைசூரு:
தகவல் தொழில்நுட்ப துறையில் மைசூரில், 600 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு 20க்கும் அதிகமான நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதனால், 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.
பெங்களூரில் தொழில் துவங்குவதற்கு, ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் முதலீடு செய்ய பல நிறுவனங்கள் முன்னுரிமை வழங்குகிறது. குறிப்பாக வெளிநாட்டு ஐ.டி., பி.டி., நிறுவனங்கள் ஆர்வம் செலுத்துகின்றன.
இதற்கிடையில், மைசூரு, ஹூப்பள்ளி, தார்வாட், மங்களூரு, பெலகாவி, கலபுரகி, கோலார் போன்ற இரண்டாம் கட்ட நகரங்களிலும் முதலீடு செய்யும்படி, கர்நாடக அரசு, முதலீட்டாளர்களை கேட்டு கொண்டது. இதன் அடிப்படையில், மைசூரில் 600 கோடி ரூபாய் முதலீடு செய்ய, ஒரு நிறுவனம் முன் வந்துள்ளது.
இது குறித்து, கர்நாடக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, மைசூரில் நேற்று கூறியதாவது:
மைசூரில் செமி கண்டக்டர், எலிமென்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம்ஸ் உட்பட 20க்கும் மேற்பட்ட மின்னணு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் முதலீடு செய்ய முன் வந்துள்ளன.
மொத்தம் 600 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம், 5,000 க்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதன் மூலம் மைசூரு நகரம் மென்மேலும் வளர்ச்சி அடையும்.
மைசூரு நகரை தொழில் நகரமாக மாற்றுவதற்கு முயற்சியில், கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. சர்வதேச அளவில், கர்நாடகாவை மின்னணு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையமாக மாற்றுவதே அரசின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.