6,522 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் முக்கிய அறிவிப்பு
6,522 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் முக்கிய அறிவிப்பு
UPDATED : டிச 05, 2009 12:00 AM
ADDED : டிச 05, 2009 04:48 PM
சென்னை: தமிழகத்தில் 6,522 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அல்லது இணையதளத்தில் தங்களது பதிவை சரிபார்த்துக் கொள்ளுமாறு, வேலைவாய்ப்புத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் ஜீவரத்தினம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்த கல்வியாண்டில், தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 6,522 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளன. ஆங்கில ஆசிரியர்கள் 1,554, கணிதம் 1,422, இயற்பியல் 883, வேதியியல் 882, வரலாறு 567, தாவரவியல், விலங்கியல் தலா 378, தமிழ் 332, புவியியல் 126 பணியிடங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன.
இதில், பள்ளிக் கல்வி பிரிவில் 1,603 பேரும், தொடக்கக் கல்வி பிரிவில் 4,919 பேரும் தேர்வு செய்யப்படுவர். எனவே, அனைத்து மாவட்டங்களிலும் பதிவு செய்துள்ள பட்டதாரி ஆசிரியர்கள் தமது வேலைவாய்ப்பு பதிவு விவரங்களை, அந்தந்த மாவட்ட தேசிய தகவல் மைய இணையதளத்தில் டிச. 9ம் தேதி முதல் பார்வையிடலாம்.
விடுபட்டவர்கள், குறைகள் ஏதும் இருந்தால் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும். விவரங்கள் சரியாக இருந்தால் மாவட்ட வேலைவாய்ப்பகத்துக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. மேலும், இந்த சரிபார்க்கும் வாய்ப்பை டிச. 21ம் தேதிக்குள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பின் எவ்வித கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
