பஞ்சாயத்து அலுவலகம் முன் 6ம் வகுப்பு மாணவி போராட்டம்
பஞ்சாயத்து அலுவலகம் முன் 6ம் வகுப்பு மாணவி போராட்டம்
UPDATED : ஆக 26, 2025 12:00 AM
ADDED : ஆக 26, 2025 10:09 AM
தாவணகெரே:
சாலை வசதி இல்லாமல், பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டதால் 6ம் வகுப்பு மாணவி, கிராம பஞ்சாயத்து அலுவலகம் முன் போராட்டம் நடத்தினார்.
தாவணகெரே தாலுகா ஆலுார் கிராமத்தை சேர்ந்தவர் சுஷ்மிதா, 11. இவர், அதே கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், தினமும் வீட்டிலிருந்து பள்ளிக்கு நடந்து செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மழை பெய்தால் சேறும், சகதியுமாக மாறிவிடும். அப்படிப்பட்ட சாலையில் நடப்பது சவாலாக உள்ளது. இதனால், மாணவி பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த மாணவி சுஷ்மிதா, சாலை சீரமைக்கக் கோரி ஆலுார் கிராம பஞ்சாயத்து அலுவலகம் முன், பதாகைகளை கையில் ஏந்தியபடி நேற்று முன் தினம் தனி ஒருத்தியாக போராட்டம் நடத்தினார். இதையறிந்த, கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் மாணவியிடம் பேச்சு நடத்தினர். அவரது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். இதையடுத்து, சிறுமி தன் போராட்டதை கைவிட்டு, அங்கிருந்து சென்றார்.
இதுகுறித்து சிறுமி சுஷ்மிதா கூறியதாவது:
என் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. சாலை, குடிநீர் வசதி செய்து தரக்கோரி போராட்டம் நடத்தினேன். சாலை வசதிகள் இல்லாததால் பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
இதை அனைத்தையும் கிராம பஞ்சாயத்து அதிகாரிகளிடம் கூறினேன். அவர்கள் என் கோரிக்கைளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். என் கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால், மீண்டும் போராட்டம் நடத்துவேன்.