UPDATED : மார் 06, 2025 12:00 AM
ADDED : மார் 06, 2025 07:55 PM
பெங்களூரு:
காணாமல் போன கல்லுாரி மாணவரை கண்டுபிடிக்க, எஸ்.பி., தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக, சட்டசபையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா கூறினார்.
சட்டசபையின் பூஜ்ய நேரத்தில் சபாநாயகர் காதர், தன் ஊரான மங்களூரில் கல்லுாரி மாணவர் ஒருவர் காணாமல் போனது பற்றி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா அளித்த பதில்:
மங்களூரில் பி.யு.சி., இரண்டாம் ஆண்டு மாணவர், கல்லுாரியில் இருந்து தேர்வுக்காக ஹால் டிக்கெட்டை, கடந்த மாதம் 25ம் தேதி வாங்கினார். பின், அவர் காணாமல் போய் உள்ளார். ரயில் தண்டவாளத்தில் அந்த மாணவர் பயன்படுத்திய செருப்பு, மொபைல் போன் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
டிரோன் உதவியுடன் அந்த இடத்தைச் சுற்றி 2 கி.மீ., சுற்றளவில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் மாணவரை பற்றி எந்த தகவலும் இல்லை.
நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு சென்றாரா என்றும் விசாரித்து வருகிறோம். மாணவர் பயன்படுத்திய மொபைல் போனில் 16 இலக்க பாதுகாப்பு குறியீடு அமைத்துள்ளார். இதனால் மொபைல் போனில் என்ன உள்ளது என்பதை கண்டுபிடிப்பதில் சவால் உள்ளது.
மாணவரை கண்டுபிடிக்க தட்சிண கன்னடா எஸ்.பி., தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. எஸ்.பி.,யுடன் நான் தொடர்ந்து பேசி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பேசிய பா.ஜ., உறுப்பினர் சுனில்குமார், பரங்கிபேட்டையிலும் ஒரு மாணவர் காணாமல் போய் 8 முதல் 10 நாட்கள் ஆகின்றன. அவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பரங்கிபேட்டையில் முழு அடைப்பும் நடந்தது. அந்த மாணவரை கண்டுபிடிக்கவும் குழு அமைக்க வேண்டும், என்றார்.