கர்நாடகாவில் பி.யு.சி., 2ம் ஆண்டு தேர்வுகளில் 73.45 சதவீதம் பேர் தேர்ச்சி!
கர்நாடகாவில் பி.யு.சி., 2ம் ஆண்டு தேர்வுகளில் 73.45 சதவீதம் பேர் தேர்ச்சி!
UPDATED : ஏப் 11, 2025 12:00 AM
ADDED : ஏப் 11, 2025 10:13 PM
கர்நாடகா:
கர்நாடகாவில் கடந்த மாதம் 1ம் தேதி முதல் 20ம் தேதி வரை, பி.யு.சி.,, இரண்டாம் ஆண்டு தேர்வுகள் நடந்தன. மொத்தம் 1,171 மையங்களில் நடந்த தேர்வை 2,92,111 மாணவர்களும், 3,45,694 மாணவியரும் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் 21ம் தேதியில் இருந்து இம்மாதம் 2ம் தேதி வரை நடந்தது.
மொத்தம் 76 மையங்களில் 28,092 ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி அமைச்சர் மது பங்காரப்பா, பள்ளிக்கல்வி செயலர் ரஷ்மி மகேஷ், பி.யு.சி., இயக்குநர் சிந்து பி.ரூபேஷ் உள்ளிட்டோர், மல்லேஸ்வரத்தில் உள்ள பி.யு.சி., அலுவலகத்தில் வெளியிட்டனர்.
அரசு கல்லுாரி
பின், மது பங்காரப்பா அளித்த பேட்டி:
பி.யு.சி., இரண்டாம் ஆண்டு தேர்வை 6,37,805 மாணவ - மாணவியர் எழுதினர். இதில் 4,68,439 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 73.45.
தேர்வு எழுதிய 2,92,111 மாணவர்களில் 1,99,227 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி சதவீதம் 68.20. மாணவியர் 3,45,694 பேர் தேர்வு எழுதினர். இதில் 2,69,212 பேர் வெற்றி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 77.88
கன்னட வழி
கன்னட வழியில் தேர்வு எழுதிய 2,08,794 பேரில் 1,17,703 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 56.37. ஆங்கில வழியில் தேர்வு எழுதிய 4,29,011 பேரில் 3,50,736 பேர் வெற்றி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 81.75.
கலை பிரிவில் பல்லாரி மாணவி சஞ்சனா பாய் 597 மதிப்பெண் எடுத்து முதலிடம்; வணிக பிரிவில் தட்சிண கன்னடா மாணவி தீபாஸ்ரீ 599 மதிப்பெண் எடுத்து முதலிடம்; அறிவியல் பிரிவில் தட்சிண கன்னடா மாணவி அமுல்யா காமத் 599 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்து உள்ளனர்.
விடைத்தாள் நகல்
தேர்வு முடிவுகள், https://karresults.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவர்கள் இம்மாதம் 17ம் தேதிக்குள் பாடம் ஒன்றுக்கு 530 ரூபாயை ஆன்லைன், வங்கி சலான் மூலம் செலுத்தலாம். வரும் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை இணையதளத்தில் விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் 12ம் தேதி முதல் 17ம் தேதிக்குள் பாடம் ஒன்றுக்கு 1,670 ரூபாய் ஆன்லைனில் செலுத்த வேண்டும். இதற்கான முடிவுகள், https://kseab.karnataka.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
ஆண்டுக்கு மூன்று முறை தேர்வு நடத்தப்படும். முதல் தேர்வில் தேர்ச்சி அடையாதவர்களை, தோல்வி அடைந்தவர்கள் என்று நான் சொல்ல மாட்டேன். இன்னும் இரண்டு தேர்வு உள்ளது. இரண்டாவது தேர்வு எழுதுபவர்கள் சம்பந்தப்பட்ட கல்லுாரிகளுக்கு சென்று, இன்று (நேற்று) முதல் 17ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம்.
இரண்டாவது தேர்வு, இம்மாதம் 24ம் தேதி துவங்கி, அடுத்த மாதம் 8ம் தேதி நிறைவு பெறுகிறது. மூன்றாவது தேர்வு ஜூன் 9ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை நடக்கிறது. இரண்டாவது, மூன்றாவது தேர்வு எழுதுபவர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ - மாணவியருக்கும் வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்வில் 1,69,366 மாணவ - மாணவியர் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம், பி.யு.சி., இரண்டாம் ஆண்டு தேர்வில் தமிழ் பாடத்தை 276 மாணவர்கள் எழுதினர். அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளனர். இது, 100 சதவீதம் தேர்ச்சி சாதனையாகும்.

