sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

76வது குடியரசு தின விழா கோலாகலம்: கலாசார, ராணுவ வலிமையை காட்டிய அணிவகுப்பு

/

76வது குடியரசு தின விழா கோலாகலம்: கலாசார, ராணுவ வலிமையை காட்டிய அணிவகுப்பு

76வது குடியரசு தின விழா கோலாகலம்: கலாசார, ராணுவ வலிமையை காட்டிய அணிவகுப்பு

76வது குடியரசு தின விழா கோலாகலம்: கலாசார, ராணுவ வலிமையை காட்டிய அணிவகுப்பு


UPDATED : ஜன 27, 2025 12:00 AM

ADDED : ஜன 27, 2025 09:30 AM

Google News

UPDATED : ஜன 27, 2025 12:00 AM ADDED : ஜன 27, 2025 09:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
நாட்டின், 76வது குடியரசு தின விழா டில்லியில் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. நாட்டின் பன்முக கலாசாரத்தையும், ராணுவத்தின் வலிமையையும், பொருளாதார முன்னேற்றத்தையும் உலகுக்கு காட்டும் வகையில் நடந்த வண்ணமிகு அணிவகுப்புகள் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.

நம் நாடு, 1947ல் சுதந்திரம் பெற்ற பின், 1950ல் குடியரசானது. கடந்த 1950 ஜன., 26ல் முதல் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. நாட்டின் 76வது குடியரசு தின நிகழ்ச்சிகள் டில்லியின் கடமை பாதையில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டன.

நாட்டின் முதல் குடியரசு தினத்தின் சிறப்பு விருந்தினராக, ஆசிய நாடான இந்தோனேஷியாவின் அதிபராக இருந்த சுகர்னோ பங்கேற்றார். தற்போது, 76வது குடியரசு தின விழாவில், அந்த நாட்டின் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ பங்கேற்றார்.

குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில், ஜனாதிபதி திரவுபதி முர்முவும், இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவும் கடமை பாதைக்கு வந்தனர்.

ஜனாதிபதி முர்மு மூவர்ண கொடியை ஏற்றினார். அதைத் தொடர்ந்து தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. பின், 21 குண்டுகள் முழங்க மூவர்ண கொடிக்கு ஜனாதிபதி முர்மு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார்.

கலை நிகழ்ச்சிகள்

இதைத் தொடர்ந்து, வண்ணமயமான அணிவகுப்பு துவங்கியது. நம் வளமான பாரம்பரிய கலாசாரம், பெண் சக்தி மற்றும் ராணுவத்தின் வலிமை இந்த அணிவகுப்பில் பிரமாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டன.

முன்னதாக, புதுடில்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் வருகையுடன் குடியரசு தின விழா நேற்று துவங்கியது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து பிரதமர் மரியாதை செலுத்தினார்.

குடியரசு தின விழாவுக்கு வந்த ஜனாதிபதி முர்மு, இந்தோனேஷிய அதிபர் சுபியாண்டோவை, பிரதமர் மோடி வரவேற்றார்.

மத்திய அமைச்சர்கள், முப்படைகளின் உயர் அதிகாரிகள், பல்வேறு நாட்டு துாதர்கள் என, பலரும் அணிவகுப்பை பார்த்து ரசித்தனர். ஆயிரக்கணக்கான பொதுமக்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முதல் முறையாக, 5,000க்கும் மேற்பட்ட பழங்குடியின மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள், 45 வகையான நடன நிகழ்ச்சிகளை நடத்தினர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த இவர்கள், கடமை பாதை முழுதும் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். கடமை பாதையில் உள்ள அனைத்து பார்வையாளர்களும் ஒரே நேரத்தில் நடன நிகழ்ச்சிகளை பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சங்கீத நாடக அகாடமி ஏற்பாடு செய்திருந்த, வாழ்க பாரதம் என்று பொருள்படும், ஜெயதி ஜெய மம பாரதம் என்ற பெயரில், இந்த கலாசார நிகழ்ச்சி, 11 நிமிடங்களுக்கு நடத்தப்பட்டது. இது, நாட்டின் பல வகையான பழங்குடியின மற்றும் நாட்டுப்புறக் கலைகளை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அமைந்திருந்தது.

இதைத் தொடர்ந்து, 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அத்துடன், 15 மத்திய அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகளின் சாதனைகள் மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு நடந்தது. இந்தாண்டுக்கான அணிவகுப்பு, ஸ்வர்ண பாரதம் - பாரம்பரியத்தில் இருந்து வளர்ச்சி என்ற கருப்பொருளில் நடத்தப்பட்டது.

விமான சாகசம்

இதன்படி, அந்தந்த மாநிலங்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார ஊர்திகள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. இதைத் தொடர்ந்து, நாட்டின் ராணுவ பலத்தை உலகுக்கு காட்டும் வகையிலான பிரமாண்ட அணிவகுப்பு நடந்தது.

இதில், பிரம்மோஸ், பினாகா, ஆகாஷ் போன்ற ஏவுகணைகளுடன், கண்காணிப்பு அமைப்பான சஞ்சய், டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பிரளய் என்ற, தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணை முதல் முறையாக அணிவகுப்பில் இடம்பெற்றது.

பீஷ்மா வகையிலான சரத் என்ற பீரங்கி, ஏவுகணைகளை செலுத்தும் அக்னிபான், பஜ்ரங் உள்ளிட்டவையும் அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தன. முதல் முறையாக, முப்படைகளின் சார்பில் ஒரே அலங்கார ஊர்தி அமைக்கப்பட்டிருந்தது.

ராணுவ அணிவகுப்பை, டில்லி பிராந்தியத்தின் ராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் பவனிஷ் குமார் தலைமை ஏற்று வழிநடத்தினார். கார்கில் போரில் பங்கேற்ற பரம் வீர் சக்ரா விருது பெற்ற சுபேதர் மேஜர்களான யோகேந்திர சிங் யாதவ், சஞ்சய் குமார் ஆகியோரும் அணிவகுப்பில் பங்கேற்றனர்.

கடமை பாதையில் நடந்த அணிவகுப்பு மக்களை ஈர்த்த நிலையில், நம் விமானப்படை போர் விமானங்கள் ஆகாயத்தில் அணிவகுத்து வந்து, பார்வையாளர்களை சிலிர்க்க வைத்தன. ஆகாயத்தில் பல சாகசங்களை விமானப் படையினர் நடத்தினர்.

அனைத்துக்கும் உச்சமாக, ராணுவத்தின், தி டேர் டெவில்ஸ் பிரிவைச் சேர்ந்த சாகசக் குழு, மோட்டார் சைக்கிள்களில் வந்து சாகச நிகழ்ச்சிகளை நடத்தியது. கேப்டன் ஆஷிஷ் ரானா தலைமையிலான இந்தக் குழுவின் சாகசங்கள் பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தன.

ஒட்டுமொத்தத்தில், நாட்டின் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும், ராணுவத்தின் வலிமையையும் வெளிக்காட்டும் வகையில், டில்லி குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் அரங்கேறின.

சுண்டியிழுத்த யாழ்!

இந்தாண்டு சுதந்திர தினத்தின் கருப்பொருள், பாரம்பரியமும் வளர்ச்சியும் என்பதாகும். இதை உணர்த்தும் வகையில், கலாசார அமைச்சகத்தின் அலங்கார ஊர்தி அமைந்திருந்தது. நாட்டின் பாரம்பரிய கலாசார பன்முகத்தன்மையை காட்டும் வகையில், இது அமைக்கப்பட்டிருந்தது. ஒரு பக்கம் ஒடிசாவின் கொனார்க்கில் உள்ள சக்கரத்தின் மீது, தமிழகத்தின் புராதன கலாசாரத்தை காட்டும் வகையில், யாழ் இசைக்கருவி அமைக்கப்பட்டிருந்தது. இதைத் தவிர, கல்பவிருட்சத்தை காட்டும் வகையில், தங்கப் பறவை அமைக்கப்பட்டிருந்தது. இவை, பார்வையாளர்களை சுண்டி இழுத்தன.

மோடியின் தலைப்பாகை பாரம்பரியம்!

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் கொடியேற்றும்போது, ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு வகையான தலைப்பாகையை பிரதமர் மோடி அணிவார். அதுபோல, குடியரசு தின விழாவின்போதும் நாட்டின் பாரம்பரியத்தை காட்டும் வகையில், வண்ணமயமான தலைப்பாகையை அணிவார்.இந்தாண்டு குடியரசு தின விழாவில், சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணங்கள் கலந்த நீண்ட தலைப்பாகையை அவர் அணிந்திருந்தார். அதற்கு ஏற்ப, பிரவுன் நிறத்தின் பந்த்காலா கோட் அணிந்திருந்தார்.

கேரள பழங்குடி மன்னர்

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில், மன்னன் என்ற பழங்குடியின சமூகம் உள்ளது. 300 குடும்பங்கள் உள்ள இந்த சமூகத்தின் மன்னராக, ராஜமன்னன் என்பவர் உள்ளார். பொருளாதார பட்டதாரியான இவர், சாதாரண விவசாயி. மன்னன் சமூகத்தின் விழாக்களில், மன்னர் ராஜமன்னனுக்கு ராஜ மரியாதை வழங்கப்படும். மன்னர் என்பதை குறிக்கும் வகையில், பிரத்யேக தலைப்பாகையை ராஜமன்னன் எப்போதும் அணிந்திருப்பார். இந்நிலையில், டில்லியில் நேற்று நடந்த குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், மன்னன் சமூகத்தின் மன்னர் ராஜமன்னன், தன் மனைவி பினுமோலுடன் நேற்று பங்கேற்றார். இந்த விழாவில் பழங்குடி மன்னர் ஒருவர் பங்கேற்றது இதுவே முதல் முறை. ராஜமன்னன் டில்லிக்கு சென்ற செலவை, கேரள அரசு ஏற்றுக் கொண்டது.

300 இசை கலைஞர்கள்

குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், நாட்டின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில், 300 இசை கலைஞர்கள் வண்ணமயமான உடையில், சாரே ஜஹான் சே அச்சா... என்ற பாடலை இசைத்தபடி அணிவகுத்துச் சென்றனர். இது தவிர, ஷெஹ்னை, சுந்தரி, நாதஸ்வரம், பீன், மஷக் பீன், ரன்சிங்கா, புல்லாங்குழல், கரடி மஜலு, மொஹுரி, சங்கா, துடாரி, தோல், கோங், நிஷான், சாங், தாஷா, சம்பல், செண்டா, இடக்கா, லெசிம், தவில், குடும் பாசா, தலாம் மற்றும் மோன்பா ஆகிய இசைக் கருவிகளும் இசைக்கப்பட்டன.







      Dinamalar
      Follow us