மாணவியருக்கு பாலியல் தொல்லை பள்ளி முதல்வர் உட்பட 8 பேர் கைது
மாணவியருக்கு பாலியல் தொல்லை பள்ளி முதல்வர் உட்பட 8 பேர் கைது
UPDATED : ஆக 19, 2024 12:00 AM
ADDED : ஆக 19, 2024 10:07 PM
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே கிங்ஸ்லி மெட்ரிக் பள்ளியில் சமீபத்தில் என்.சி.சி., முகாம் நடந்தது. இதில், 17 மாணவியர் தங்கி பயிற்சி பெற்றனர். 8ம் தேதி இரவு அனைத்து மாணவியரும் ஆடிட்டோரியத்தில் துாங்கினர்.
எட்டாம் வகுப்பு
அதிகாலையில் வந்த காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த என்.சி.சி., பயிற்சியாளர் சிவராமன், 12 வயதான எட்டாம் வகுப்பு மாணவியை எழுப்பி வெளியே அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதேபோல் மேலும் நான்கு மாணவியருக்கு பாலியல் தொல்லை தரப்பட்டுள்ளது. ஐந்து மாணவியரும் பள்ளி நிர்வாகத்தில் புகார் தெரிவித்தபோது, 'பெரிதுபடுத்த வேண்டாம்' என, கூறி உள்ளனர்.
இந்நிலையில், ஒரு மாணவிக்கு, 16ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்படவே, அவரது தாய் விசாரித்துள்ளார். அப்போது முகாமில் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் தரப்பட்டது.
என்.சி.சி., பயிற்சியாளர் சிவராமன், 28, பள்ளி முதல்வர் சதீஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சேலம் டி.ஐ.ஜி., உமா, எஸ்.பி., தங்கதுரை நேற்று விசாரணை நடத்தினர்.
முதல் குற்றவாளி
பள்ளி முதல்வர், சமூக அறிவியல் ஆசிரியர், பள்ளி தாளாளர், பயிற்சியாளர்கள் என ஏழு பேரை பர்கூர் மகளிர் போலீசார் கைது செய்தனர். காந்திநகரைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை கிழக்கு மாவட்ட செயலரும், முதல் குற்றவாளியுமான சிவராமனை தனிப்படை போலீசார் நேற்று கோவையில் கைது செய்தனர். சுதாகர் என்பவரை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே பள்ளி, கல்லுாரிகளில், சிவராமன் என்.சி.சி., முகாம் நடத்திஉள்ளார். அப்போதும் பல மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததும், போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.