அமெரிக்காவில் 10 மாதங்களில் 80,000 விசாக்கள் ரத்து
அமெரிக்காவில் 10 மாதங்களில் 80,000 விசாக்கள் ரத்து
UPDATED : நவ 07, 2025 08:45 AM
ADDED : நவ 07, 2025 08:47 AM

வாஷிங்டன்:
அமெரிக்காவில், டொனால்டு டிரம்ப் அதிபராக பதவியேற்றதில் இருந்து இதுவரை, 80,000க்கும் மேற்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்றார். குடியேற்றம் தொடர்பாக பல கடுமையான கட்டுப்பாடுகளை அவர் அறிவித்தார். விசாக்களுக்கான நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த 10 மாதங்களில் மட்டும், மாணவர், சுற்றுலா, தற்காலிக பணிக்காக வரும் குடியேற்றம் அல்லாத, 80,000க்கும் மேற்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இதில் பாதிக்கும் மேற்பட்டவை, மூன்று முக்கிய காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளன. மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 16,000 விசாக்களும், தாக்குதல் போன்ற காரணங்களுக்காக 12,000 விசாக்களும் மற்றும் திருட்டு வழக்கில் சிக்கிய காரணத்தால் 8,000 விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், காலாவதியான மற்றும் சட்ட மீறல்களுக்காக 6,000க்கும் மேற்பட்ட மாணவர்களின் விசாக்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டுள்ளன.

