UPDATED : ஜூன் 04, 2025 12:00 AM
ADDED : ஜூன் 04, 2025 08:40 AM
பெங்களூரு: 
கர்நாடகாவில் நேற்று மட்டும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
கர்நாடகாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை நுாற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், நான்கு பேர் உயிரிழந்தனர். இதனால், மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு தொற்று பரவும் அபாயம் இருப்பதால், மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். கொரோனா அறிகுறிகள் இருந்தால், மாணவர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கும்படி சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை:
மாநிலத்தில் நேற்று மட்டும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 29 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 504 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளோர் 17.2 சதவீதம் பேர்.
தற்போது, மாநிலத்தில் 311 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 297 பேர் வீட்டிலே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். எட்டு பேர் அரசு மருத்துவமனையிலும்; 6 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பெங்களூரில் உள்ள பெரும்பாலான அரசு, தனியார் பள்ளிகளில் உள்ள மாணவர்கள் நேற்று முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வந்தனர். சளி, இருமல், காய்ச்சல் உள்ள மாணவர்களை அடையாளம் காண, ஆசிரியர்கள் முயன்றனர்.
மாணவர்களை பள்ளியில் விடுவதற்கு வந்த பெற்றோரும் முகக்கவசம் அணிந்து வந்தனர். சில தனியார் பள்ளிகளில், உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டது.

