UPDATED : ஜன 19, 2010 12:00 AM
ADDED : ஜன 19, 2010 02:27 PM
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. துவக்கக்கல்வியில் ஏ.பி.எல்., எனும் செயல்வழிக்கற்றல் முறையும், ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளுக்கு ஏ.எல்.எம்., எனும் படைப்பாற்றல் கல்விமுறையும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒன்பது மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்புகளில் தரத்தை மேம்படுத்த பல்வேறு செயல்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக ஒன்பதாம் வகுப்பில் ஏ.எல்.எம்., ப்ளஸ் எனும் மேம்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி முறை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களை எளிய முறையில் மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், இக்கல்வி முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்பதாம் வகுப்புகளில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு இக்கல்வி முறை குறித்து இரண்டு நாள் உண்டு உறைவிட பயிற்சி முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் பாடவாரியாக தனித்தனியே இப்பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக ஒவ்வொரு பாடத்துக்கும் 40 ஆசிரியர்கள் வீதம் ஜனவரி 19, 20 தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட உள்ளது. சேலம் மாவட்டத்தில் கணித பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், ஆத்தூர் சி.எஸ்.ஐ., மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலப்பாடத்துக்கும், சங்ககிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் பாடத்துக்கும், நடுப்பட்டி மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் பாடத்துக்கும் இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது.
