‘95 சதவீத தொழிலாளர்கள் முறையான பயிற்சி பெறாதவர்கள்’
‘95 சதவீத தொழிலாளர்கள் முறையான பயிற்சி பெறாதவர்கள்’
UPDATED : டிச 29, 2009 12:00 AM
ADDED : டிச 29, 2009 05:21 PM
கோவை: “சமூக கல்லூரிகள் திட்டத்தின் மூலம் இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலை(இக்னோ) அளிக்கும் பயிற்சி, உற்பத்தி திறனையும் நாட்டின் பொருளாதாரத்தையும் பெருக்க உதவும்” என்று இக்னோ பல்கலை துணைவேந்தர் ராஜசேகரன் கூறினார்.
கோவை சர்தார் வல்லபபாய் படேல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்ஸ்டைல் மேனேஜ்மென்ட் பயிற்சி மையத்தில், இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலையின்(இக்னோ) கல்வி மைய திறப்பு விழா இன்று (டிச. 29ம் தேதி) நடந்தது. பல்கலையின் துணை வேந்தர் ராஜசேகரன் திறந்து வைத்தார்.
இதன் பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வளர்ந்த நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரிவோரில் 95 சதவீதத்தினரும் துறை சார்ந்த முறையான பயிற்சி பெற்றவர்கள். ஆனால் இந்தியாவில் வெறும் 5 சதவீதத்தினர் மட்டுமே பயிற்சி பெற்றவர்களாக உள்ளனர். பயிற்சி பெறாமலே தற்போது பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு சமூக கல்லூரிகள் திட்டத்தின் வாயிலாக முறையான பயிற்சி அளித்தால், உற்பத்தி பெருகும்; பொருளின் தரம் மேம்படும். இந்த நோக்கத்தை நிறைவேற்றவே ஆடைத் தயாரிப்பில் திறமையை மேம்படுத்துவதற்கான பயிற்சி கோவையில் அளிக்கப்படுகிறது. இது போல் தேனி வளர்ப்பு, இயற்கை வேளாண்மை உள்ளிட்ட பிற துறைகளிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்திய ஆடைகள் உலகளவில் சந்தைப்படுத்தப்படுவதால் இது போன்ற பயிற்சிகள் முக்கியம். அந்தந்த தொழில்கள் சார்ந்த பகுதிகளில் ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை, அவர்கள் பணிபுரியும் இடத்திலேயே பயிற்சி அளிக்கப்படுகிறது. பதவி உயர்வுக்கு இப்பயிற்சி உதவும். பயிற்சி தொடர்பாக ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சிலுடன்(ஏ.இ.பி.சி) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 500 கல்லூரிகளில் பயிற்சி அளிக்க இலக்கிட்டுள்ளோம்.
இந்திய ராணுவத்தில் 18 வயதில் சேருபவர்களுக்கு, பணியிடத்திலேயே வாழ்க்கைத் திறன், மொழித் திறன் பற்றி முழுநேர பயிற்சி அளிக்கிறோம். இதனால் 39 வயதில் பட்டதாரிகள் ஆக வெளியே வரும் இவர்களுக்கு, எளிதில் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 50,000 பேர் இது போல் பயிற்சி பெறுகின்றனர்.
இயற்கை சீற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கடத்தப்படுபவர்களை மீட்டு, புனர்வாழ்வு அளிப்பது பற்றியும் மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து ‘இக்னோ’ பயிற்சி அளிக்கிறது. 2010 ஜன., முதல் இப்பயிற்சி துவங்கவுள்ளது. இதே போல் ‘யுனெஸ்கோ’ வுடன் இணைந்து, சுற்றுச்சூழல் காப்பது, கல்வி மேம்பாடு உள்ளிட்ட சமூக கடமைகள் பற்றி பத்திரிகையாளர்களுக்கும் பயிற்சி அளிக்கிறோம். இவ்வாறு, ராஜசேகரன் கூறினார்.
‘இக்னோ’ சார்பில் ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு குறித்த இரண்டு நாள் பயிற்சி, சமூக கல்லூரித் திட்டத்தின் மூலம் அளிக்கப்படுகிறது. இதற்காக சர்தார் வல்லபபாய் படேல் மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. டிச. 29ம் தேதி நடந்த முதல் நாள் பயிற்சி வகுப்பில் 60 பேர் பங்கேற்றனர். ‘இக்னோ’ பல்கலையின் வேந்தர் லதா, சர்தார் வல்லபபாய் படேல் இன்ஸ்டிடியூட் இயக்குனர் பூஜார் ஆகியோர் உடனிருந்தனர்.
