95.27 சதவீதம் தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி 51 பள்ளிகள் நுாறு சதவீதம் பெற்று சாதனை
95.27 சதவீதம் தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி 51 பள்ளிகள் நுாறு சதவீதம் பெற்று சாதனை
UPDATED : மே 09, 2026 05:32 PM
ADDED : மே 09, 2026 05:33 PM
தேனி:
தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் 95.27 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் 51 பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை நடந்தது. மாவட்டத்தில் 141 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 6007 பேர், மாணவிகள் 6625 என மொத்தம் 12,632 பேர் தேர்வு எழுதினர்.
இதில் மாணவர்கள் 5606 பேர், மாணவிகள் 6428 என மொத்தம் 12,034 பேர் தேர்ச்சி பெற்று ,95.27 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 93.32 சதவீதம், மாணவிகள் 97.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகள் சம்மந்தப்பட்ட மாணவர்களின் அலைபேசிகளுக்கு அனுப்பபட்டன. ஒரு சில மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வந்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர்.
2025 பிளஸ் 2 பொதுத்தேர்வில் 94.43 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று தேனி மாவட்டம் மாநில அளவில் 24ம் இடம் பிடித்தது. இந்தாண்டு இரு இடங்கள் முன்னேறி 22ம் இடம் பெற்றது. கடந்தாண்டை விட இந்தாண்டு 4 பள்ளிகள் கூடுதலாக 100 சதவீத தேர்ச்சி பெற்று மாவட்டத்தில் 51 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
பாடங்களில் தேர்ச்சி குறைவு: கடந்தாண்டு 13 பாடப்பிரிவுகளில் 303 மாணவர்கள் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றிருந்தனர். அதிக பட்சமாக கணினி அறிவியல் பாடத்தில் 108 பேர், கம்யூட்டர் அப்ளிகேசன் பாடத்தில் 74 பேர் 100 மதிப்பெண் பெற்றிருந்தனர்.
இந்தாண்டு 10 பாட பிரிவுகளில் 153 பேர் நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடத்தில் 71 பேர், கணக்குப்பதிவியலில் 25 பேர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
ஐந்து பள்ளிகள் 73 முதல் 80 சதவீத தேர்ச்சி, 81-முதல் 90 சதவீதத்திற்குள் 73 பள்ளிகள், 90 முதல் 99 சதவீதத்திற்குள் 12 பள்ளிகள், 51 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
சிறப்பு ஏற்பாடு
தேர்ச்சி பெறாத மாணவர்களை துணைத்தேர்வு எழுதுவதற்கான பணிகளை கல்வித்துறையினர் துவக்கி உள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. அவர்களை துணைத்தேர்வில் தேர்ச்சி பெற வைத்து உயர்கல்விக்கு அனுப்ப ஏற்பாடுகள் நடந்து வருவதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
