96,000 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் குறித்த தகவலுக்கு மறுப்பு! எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என நிதித்துறை விளக்கம்
96,000 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் குறித்த தகவலுக்கு மறுப்பு! எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என நிதித்துறை விளக்கம்
UPDATED : ஏப் 02, 2026 04:59 PM
ADDED : ஏப் 02, 2026 05:01 PM

கர்நாடக மாநில அரசு துறைகளில், 5.88 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில், 96,844 பேர் ஒப்பந்த ஊழியர்கள். மருத்துவ கல்வி துறையில் மட்டும், 15,824 ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
காலியிடங்கள்
மாநில காங்கிரஸ் அரசு, 2028க்குள் அனைத்து துறைகளிலும், ஒப்பந்த ஊழியர்கள் நியமன முறையை முற்றிலுமாக ஒழிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. அதே நேரத்தில் காலியாக உள்ள இடங்களை நேரடியாக நிரப்பவும் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், அரசு துறைகளில் பணிக்கால ஒப்பந்தம் முடிந்த பின்னரும், பலர் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருவதாக, நிதித்துறைக்கு தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக, அனைத்து துறை தலைமை அதிகாரிகளுக்கு, நிதித்துறை சுற்றிக்கை அனுப்பியதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளியானது. அதில், 'எந்த சூழ்நிலையிலும் ஒப்பந்த காலம் முடிந்த ஊழியர்களை பணியில் தொடர அனுமதிக்க வேண்டாம்' என, தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அரசு அதிர்ச்சி
இத்தகவல், நேற்று காலை மீடியாக்களில் வெளியாகவே, ஒப்பந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் அதிகாரிகளிடம் இது குறித்து கேள்வி எழுப்பினர். இதனால் குழப்பம் அடைந்த அதிகாரிகள், நிதித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டனர்.
நிதித்துறை அதிகாரிகள், தாங்கள் அப்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என தெரிவித்ததுடன், இது குறித்து, முதல்வர் சித்தராமையாவின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அவரும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
இது தொடர்பாக, நிதித்துறை செயலர் ராஜம்மா நேற்று வெளியிட்ட அறிக்கை:
அரசு ஒப்பந்த ஊழியர்களின் பணி காலம் முடிந்ததும், அவர்களை பணியில் இருந்து நீக்கும்படி நிதித்துறை, மார்ச் 24ம் தேதி உத்தரவிட்டு உள்ளதாக போலி அறிக்கை ஒன்று, சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
அத்தகைய எந்தவொரு உத்தரவோ அல்லது அதிகாரபூர்வ குறிப்பாணையோ வெளியிடப்படவில்லை. இந்த போலி குறிப்பாணை, அரசு துறைகள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
நிதித்துறையின் குறிப்பாணையை போலியாக தயாரித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி, விதான் சவுதா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.
அதிருப்தி
புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒப்பந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அரசின் நடவடிக்கை, புதிதாக நேரடி அரசு பணி நியமனங்களுக்கு வழிவகுக்கும். நிரந்தர பணி நியமனங்களுக்காக காத்திருக்கும் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், அது போன்ற ஒரு உத்தரவு வெளியிடவில்லை என்று நிதித்துறை மறுப்பு தெரிவித்து உள்ளதால், ஒப்பந்த ஊழியர்கள் நிம்மதி அடைந்து ள்ளனர். அதே வேளையில், அரசு வேலைக்கு காத்திருப்போர் அதிருப்தியில் உள்ளனர்.

