வீட்டிலேயே ஆஸ்பத்திரி நடத்திய 10ம் வகுப்பு படித்த பலே டாக்டர்
வீட்டிலேயே ஆஸ்பத்திரி நடத்திய 10ம் வகுப்பு படித்த பலே டாக்டர்
UPDATED : ஏப் 04, 2025 12:00 AM
ADDED : ஏப் 04, 2025 09:46 AM
ஒடுகத்துார் :
பத்தாம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் தப்பியோட, வேலுார் அருகே அவரது மருத்துவமனைக்கு மருத்துவக் குழுவினர், சீல் வைத்துள்ளனர்.
வேலுார் மாவட்டம், ஒடுகத்துார் அடுத்த கீழ்கொத்துாரில், மருத்துவம் படிக்காமல் ஒருவர் மருத்துவமனை நடத்துவதாக புகார் வந்தது. மாவட்ட முதன்மை மருத்துவ அலுவலர் சிங்காரவேலன், வட்டார மருத்துவ அலுவலர் ராகேஷ், வி.ஏ.ஓ., சிவசக்தி, மருந்தாளுனர் கவிதா சாய் மற்றும் வேப்பங்குப்பம் போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த, 10ம் வகுப்பு மட்டுமே படித்த திருப்பதி, 45, வீட்டின் ஒரு பகுதியை மருத்துவமனையாக மாற்றி, பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது. அதிகாரிகள் வந்ததை பார்த்த திருப்பதி, அங்கிருந்து தப்பியோடினார்.
அதிகாரிகள், மருத்துவமனையை பூட்டி, சீல் வைத்து, மருத்துவம் பார்க்க பயன்படுத்திய மருந்து, மாத்திரைகளை கைப்பற்றினர். புகாரின்படி, வேப்பங்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரசு மருத்துவர் ஒருவர் கூறுகையில், சின்ன கிளினிக் என ரெய்டுக்கு போன எங்களுக்கு, அங்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. வீடு போல உள்ள ஒரு பகுதியில் மினி மருத்துவமனையே இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். காரணம், அங்கு படுக்கை வசதி இருந்தது; பல ஆண்டுகளாக மருத்துவமனை செயல்பட்டுள்ளது. சிலருக்கு சிறிய அளவிலான ஆப்பரேஷன்களும் செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. இது குறித்து விசாரணை நடக்கிறது என்றார்.

