கல்லுாரி நிறுவனரிடம் ரூ.90 லட்சம் மோசடி செய்த 73 வயது முதியவர்
கல்லுாரி நிறுவனரிடம் ரூ.90 லட்சம் மோசடி செய்த 73 வயது முதியவர்
UPDATED : செப் 20, 2024 12:00 AM
ADDED : செப் 20, 2024 09:37 AM

கோவை:
கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியில் கல்வி நிறுவன தலைவரிடம் ரூ.90 லட்சம் மோசடி செய்த முதியவரை, போலீசார் கைது செய்தனர்.
ஆர்.எஸ்.புரம் கிழக்கு சம்பந்தம் சாலையை சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 68. இவர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனக்கு சொந்தமான கட்டடத்தில், ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி நடத்தி வருகிறார்.
முதல்வராக ஜெயராம் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வேலாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம், 73 என்பவர் கல்லுாரி முதல்வர் வாயிலாக, ராஜேஸ்வரியிடம் அறிமுகம் ஆகியுள்ளார்.
விளம்பரங்கள் மூலம் இக்கல்லுாரியை பிரபலப்படுத்த ஆலோசனை கூறிய அவர், மத்திய அரசின் அப்துல் கலாம் உதவித்தொகை திட்டத்திற்கு, தான் பொறுப்பாளராக இருப்பதாகவும், இத்திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்க ஒரு மாணவருக்கு ரூ. 25 ஆயிரம் செலுத்த வேண்டும் எனக் கூறி முதற்கட்டமாக, 60 மாணவர்களுக்கு ரூ. 20 லட்சத்தை, தனது வங்கி கணக்கிற்கு அனுப்ப கேட்டுள்ளார்.
ராஜேஸ்வரியும், அவர் கேட்ட பணத்தை அனுப்பியுள்ளார். பின்னர் மேலும், 300 மாணவர்களுக்கு நிதி பெற ரூ. 70 லட்சம் ஆகும் என தெரிவித்துள்ளார். அதை காசோலை மற்றும் பணமாக பெற்றுக்கொண்டுள்ளார்.
பின்னர், இத்திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்யும் சீனியர் அதிகாரிகள், கேரளாவில் உள்ளனர் என கூறி, ராஜலட்சுமியை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு யாரும் வரவில்லை.
இதனால் சொக்கலிங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போதுதான் ராஜேஸ்வரி, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து சொக்கலிங்கத்தை கைது செய்தனர்.