திட்டமிட்டு படித்தால் சிறந்த வாழ்க்கை அமையும்! பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் அறிவுரை
திட்டமிட்டு படித்தால் சிறந்த வாழ்க்கை அமையும்! பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் அறிவுரை
UPDATED : ஆக 12, 2024 12:00 AM
ADDED : ஆக 12, 2024 09:45 AM

உடுமலை:
ஒரு நல்ல கல்லுாரியில் இடம் கிடைத்து விட்டால், சிறந்த வாழ்க்கை அமையும் என்பதை உணர்ந்து, பொறுப்புணர்வுடன் திட்டமிட்டு படியுங்கள் என கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
கோவையில் நடந்த தமிழ்ப்புதல்வன் திட்ட துவக்கவிழாவில் பங்கேற்ற பின், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம் அரசு மேல் நிலைப்பள்ளிகளில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளியில் மாணவர் எண்ணிக்கை, தேர்ச்சி சதவீதம், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். விளையாட்டிலும் மாணவர்கள் ஆர்வமுடன் ஈடுபடும் வகையில், ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
மடத்துக்குளம் அரசு பள்ளி, 12ம் வகுப்பு மாணவர்களிடம் அமைச்சர் மகேஷ் பேசியதாவது:
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், இதுவரை எந்த விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இத்துடன் விட்டு விடுங்கள். ஒரு ஆண்டு மட்டும், கடினமாக உழையுங்கள். பொதுத்தேர்வுக்கு, இன்னும் ஏழு மாதமே உள்ளது.
இனிமேல் பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள்; ஒவ்வொரு நாளும், என்ன படிக்க வேண்டும், என்பதை திட்டமிட்டுக்கொள்ளுங்கள். இதில் அலட்சியமாக இருந்தால், வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட வேண்டியதாகிவிடும்.
பள்ளி படிப்பு முடிந்ததும், ஒரு நல்ல கல்லுாரிக்குள் நுழைந்து விட்டால், வாழ்க்கையே மாறிவிடும். வேலை தேடி அலைய வேண்டியதில்லை; வளாக நேர்முக தேர்விலேயே, வேலை கிடைத்து விடும்.
அதனால், டூ-இன்- ஒன் என்பது போல், மேல்நிலை அரசு பொதுத்தேர்வு முக்கியமானதாகும். இந்த நாள் சிறப்பான நாள் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான சிறந்த நாள். தமிழ்ப்புதல்வன் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளிலிருந்து, கல்லுாரிக்குள் நுழையும் போது, மாணவர்களுக்கு, மாதம், ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
ஒரு அரசாங்கம் உங்களை நம்பி, ஆண்டுக்கு, ரூ.12 ஆயிரம் முதலீடு செய்கிறது என்றால், கல்லுாரியில் சேர, எவ்வளவு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து, 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுங்கள்.
ஒட்டுமொத்தமாக, பள்ளி முடித்து, கல்லுாரியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையில், தமிழகத்தில் அதிகம் ; 10 ஆண்டுகளில், நுாறு சதவீதம் எட்டி விட வேண்டும், என்ற இலக்கு உள்ளது.
தற்போதே நீங்கள் எந்த துறையை தேர்தெடுக்கிறீர்கள்; எந்த கல்லுாரியில் சேர வேண்டும், என இலக்கு நிர்ணயித்து படியுங்கள். பொதுத்தேர்வை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்; திட்டமிட்டு படித்தால், நல்ல மதிப்பெண்கள் எடுத்து, இலக்கை எளிதாக அடையமுடியும்.
இவ்வாறு, அமைச்சர் பேசினார்.