UPDATED : மே 12, 2024 12:00 AM
ADDED : மே 12, 2024 09:52 PM
புதுச்சேரி:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், அரசு சிறப்பு பள்ளியின் பார்வையற்ற மாணவி சண்முகப்பிரியா 442 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார்.
புதுச்சேரி அடுத்த பிள்ளை சாவடியில் சமூக நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஆனந்தரங்கப்பிள்ளை அரசு சிறப்பு பள்ளி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று பெருமை சேர்த்துள்ளது. இங்கு தேர்வு எழுதிய அனைத்து சிறப்பு மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.
இந்த சிறப்பு பள்ளியில் படித்த பார்வையற்ற மாணவி சண்முகப்பிரியா 442 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். முழு பார்வையற்ற இவர் ஒன்றாம் வகுப்பு முதல் சிறப்பு பள்ளியில் படித்துள்ளார்.
மாணவி சண்முகப்பிரியா கூறுகையில், 'எங்களை போன்ற மாற்று திறன் உடையவர்களுக்காக இது போன்ற சிறப்பு பள்ளிகள் அவசியம் தேவைப்படுகிறது. ஆசிரியர்கள், பெற்றோர் ஒத்துழைப்பு இன்றி என்னால் இதை சாதித்திருக்க முடியாது.
பிளஸ் 2 படிப்பிற்கு பிறகு ஏதேனும் ஒரு டிகிரி படித்துவிட்டு எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக ஆக வேண்டும் என்பதே என்னுடைய கனவு. இந்த இலக்கினை நோக்கிய பயணத்தை துவங்கிவிட்டேன்' என்றார்.
இதே பள்ளியில் பயின்ற பார்வையற்ற மாணவிகள் லிங்கேஸ்வரி 383 மதிப்பெண், லோகேஸ்வரி 380 மதிப்பெண் பெற்றுள்ளனர். கேட்கும் திறனற்ற மாணவர்கள் சந்தோஷ், அண்டராஜூ நரசிம்மன், தவ்லத் நிஷா ஆகியோரும் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.