வீடுபுகுந்து வெட்டப்பட்ட மாணவர் மீது 5 பேர் கும்பல் மீண்டும் தாக்குதல்
வீடுபுகுந்து வெட்டப்பட்ட மாணவர் மீது 5 பேர் கும்பல் மீண்டும் தாக்குதல்
UPDATED : ஏப் 17, 2025 12:00 AM
ADDED : ஏப் 17, 2025 12:10 PM
திருநெல்வேலி:
நாங்குநேரியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட மாணவன் சின்னத்துரை மீது நேற்றும் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சேர்ந்த அம்பிகாவதி மகன் சின்னத்துரை 20. மகள் சந்திரா 17. இவர்கள் வள்ளியூர் பள்ளியில் பயின்றபோது 2023 ஆகஸ்ட்டில் சக மாணவர்கள் இவர்களது வீடு புகுந்து அரிவாளால் வெட்டினர்.
பலத்த காயமுற்ற சின்னத்துரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீண்ட நாட்களாக சிகிச்சையில் இருந்தார். தற்போது திருநெல்வேலி திருமால் நகர் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அரசு ஏற்பாட்டில் வசிக்கின்றனர். சின்னத்துரை கல்லூரியில் முதலாம் ஆண்டும், சந்திரா பள்ளியிலும் படிக்கின்றனர்.
சின்னத்துரை அலைபேசி செயலி ஒன்றின் மூலம் சிலரிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதில் தொடர்பு கொண்ட சிலர் அவரை தனியாக அழைத்துள்ளனர். அங்கு சென்ற அவரை அந்த கும்பல் கடுமையாக தாக்கி அவரிடம் இருந்து அலைபேசி, மோதிரம் ஆகியவற்றை பறித்து சென்றனர். ஏற்கனவே அரிவாள் வெட்டுப்பட்ட வலது கையிலேயே மீண்டும் காயம் ஏற்பட்டது நேற்று இரவு அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார். திருநெல்வேலி போலீசார் விசாரிக்கின்றனர்.