UPDATED : ஜன 13, 2025 12:00 AM
ADDED : ஜன 13, 2025 02:55 PM
உத்தர கன்னடா:
இன்றைய நவீன காலகட்டத்தில் மனிதர்கள் இயந்திரம் போல நிற்காமல் ஓடிக்கொண்டு இருக்கின்றனர். யாராவது ஆபத்தில் சிக்கினால் கூட உதவி செய்வதற்கு கூட யாருக்கும் மனது வருவது இல்லை.
நாம் உண்டு. நம் வேலை உண்டு என்ற மனப்பான்மையில் பலர் உள்ளனர். இத்தகையோருக்கு மத்தியில் பட்டதாரி வாலிபர், மட்டி சேகரிப்போருக்கு உதவும் மனப்பான்மையில் செயல்படுகிறார்.
உத்தர கன்னடா கார்வார் அருகே உள்ளது அகனாஷினி கிராமம். இந்த கிராமத்தில் 3,500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு வசிப்பவர்களின் பிரதான தொழில் மட்டி சேகரிப்பு. கிராமத்தில் ஓடும் அகனாஷினி ஆற்றுக்குள் இரும்புப் படகில் சென்று மட்டி சேகரித்து வந்து விற்பனை செய்கின்றனர்.
ஆனால் மட்டி சேகரிக்க செல்லும்போது விபத்தில் சிக்கி இறப்பவர்கள் குடும்பத்திற்கு அரசிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்காமல் இருந்தது. இதுபற்றி அறிந்த பட்டதாரி வாலிபர் மாருதி கவுடா என்பவர், மட்டி சேகரிக்க செல்வோருக்கு உதவி வருகிறார்.
இதுகுறித்து மாருதி கவுடா கூறியதாவது:
அகனாஷினி கிராம மக்களின் பிரதான தொழிலாக விவசாயம், மட்டி சேகரிப்பு உள்ளது. மட்டி சேகரிக்க படகில் செல்லும்போது, ஆற்றின் நடுப்பகுதியில் படகை நிறுத்திவிட்டு வலை விரிக்கின்றனர். அந்த வலையில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்து உள்ளன. ஆனால் அவர்களின் குடும்பத்திற்கு யாரும் உதவி செய்வது இல்லை.
இதனால் உத்தர கன்னடா மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனரை சந்தித்தேன். மட்டி சேகரிப்பவர்கள் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிதி உதவி செய்ய முடியுமா என்று கேட்டேன். அப்போது அவர் கண்டிப்பாக முடியும்; ஆனால் மட்டி சேகரிக்க செல்பவர்கள், மீனவர்கள் என்ற அந்தஸ்தை பெற வேண்டும். அவர்கள் பதிவு செய்ய வேண்டும் என்றார்.
இதையடுத்து மட்டி சேகரிக்க செல்வோரை, மீனவர்கள் என்று பதிவு செய்ய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். அந்த முயற்சி வெற்றி பெற்றது. தற்போது மட்டி சேகரிக்க சென்று யாராவது இறந்தால், அவர்கள் குடும்பத்திற்கு அரசிடம் இருந்து நிதி உதவி கிடைக்கிறது.
அகனாஷினி கிராம விவசாயிகளின் இரண்டு ஏக்கர் நிலத்தை, சுரங்க நிறுவனம் ஆக்கிரமித்தது. இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது, நிலத்தை குத்தகைக்கு எடுத்து இருப்பதாக சொன்னார்கள். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சில தகவல்களை பெற்றேன். அந்த நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினேன். இதனால் நிலம் திரும்ப கிடைத்தது.
பணக்காரர்களுக்கு உதவி செய்ய நிறைய பேர் வருவர். ஏழைகளுக்கு உதவ யாரும் முன்வருவது இல்லை. எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஏழைகளுக்கு உதவி செய்கிறேன். இது மனநிறைவாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்