ஆன்லைனில் வாங்கிய லேப்டாப்பில் ஓட்டை! மாணவனுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு
ஆன்லைனில் வாங்கிய லேப்டாப்பில் ஓட்டை! மாணவனுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு
UPDATED : ஜூன் 07, 2024 12:00 AM
ADDED : ஜூன் 07, 2024 10:38 AM
கோவை:
ஆன்லைன் வாயிலாக வாங்கிய லேப்டாப்பில் ஓட்டை இருந்ததால், இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
கோவை, செட்டிபாளையம், கலிபோர்னியா கார்டனை சேர்ந்தவர் ராகேஷ். கல்லுாரி மாணவரான இவர், பிலிப்கார்ட் இன்டர்நெட் பிரைவேட் லிமிடெட்டில், ஆன்லைன் வாயிலாக, 2023, அக்., 15ல், 94,990 ரூபாய்க்கு, ரைசன் 7 ஆக்டோ என்ற, சீன தயாரிப்பு லேப்டாப் வாங்கினார். பார்சலில் வந்த லேப்டாப்பை பிரித்து பார்த்த போது, மேல் பகுதியில் ஓட்டை இருப்பது தெரிய வந்தது. இது குறித்து பெங்களூரு, பிலிப்கார்ட் நிறுவனத்துக்கு புகார் அளித்தார்.
சரக்கில் குறை இருப்பதை ஒப்புக்கொண்ட அந்நிறுவனத்தினர், வேறு லேப்டாப் மாற்றித்தருவதாக கூறினர். பல மாதங்களாகியும் மாற்றித்தரப்படவில்லை. பணத்தை திருப்பித்தருமாறு, நான்கு முறை இ-மெயில் அனுப்பினார். எந்த பதிலும் அளிக்காமல், பணத்தையும் திருப்பித் தராமல், காலதாமதம் செய்தனர்.
வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும், எந்த பதிலும் அளிக்கவில்லை.
பாதிக்கப்பட்ட ராகேஷ், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், பிலிப்கார்ட் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரரிடம் பெற்ற 94,990 ரூபாயை திரும்ப கொடுக்க வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 20,000 ரூபாய், செலவுத்தொகை, 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.