கல்வி உதவித்தொகையை அபகரிக்கும் நுாதன மோசடி; மாணவர்களின் போன் எண் கசிவது எப்படி?
கல்வி உதவித்தொகையை அபகரிக்கும் நுாதன மோசடி; மாணவர்களின் போன் எண் கசிவது எப்படி?
UPDATED : செப் 17, 2025 12:00 AM
ADDED : செப் 17, 2025 09:07 AM

கோவை:
கோவை மாவட்டத்தில், 2 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அவர்களில் 20,000 மாணவர்கள் அரசின் கல்வி உதவித்தொகை பெறுகின்றனர். இம்மாணவர்களை குறி வைத்து, அவர்களுக்கு வழங்கப்படும் கல்வித் தொகையை அபகரிக்கும் செயலை, மோசடி கும்பல் செய்து வருகிறது,
மோசடி கும்பல், மாணவர்களது மொபைல் எண்களுக்கு தொடர்பு கொண்டு, 'உங்களுக்குகல்வி உதவித்தொகை வந்துள்ளது' என ஆசை வார்த்தை கூறுகின்றனர்.
அதை நம்பி, அவர்கள் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து, சில நிமிடங்களில் பணம் திருடப்படுகிறது. இந்த நுாதன மோசடி குறித்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள், முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
கல்வித்துறையினர் கூறுகையில், 'பள்ளி மாணவர்களிடம் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மாணவர்களுக்கான உதவித்தொகை விவரங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே நேரடியாக தெரிவிப்பர்.
மாணவர்களின் வங்கிக்கணக்கு போன்ற விவரங்கள் தேவைப்பட்டால், அதுவும் தலைமை ஆசிரியர்கள் மூலமாகவே பெறப்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் தேவையற்ற மொபைல் அழைப்புகளை மாணவர்களும், பெற்றோர்களும் தவிர்க்க வேண்டும்' என்றனர்.
மாணவர்களின் மொபைல் எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள், பள்ளிகளில் இருந்து எப்படி கசிக்கின்றன என்கிற கேள்வி எழுகிறது. அவர்களது தனிப்பட்ட விபரங்களில் இருந்தே, மோசடி கும்பல் மாணவர்களை தொடர்பு கொண்டு, ஆன்லைன் மோசடியில் ஈடுபடுகின்றன.'இப்பிரச்னையில், கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களைகுறிவைத்து இம்மோசடி அரங்கேற்றப்படுகிறதா என்பது குறித்துவிசாரணை நடத்தவேண்டும்.
மாணவர்களின் தரவுகள்பாதுகாக்கப்படுவதை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.