மீண்டும் 'நம்பர் 1' முனைப்பு இனி, ஞாயிறு சிறப்பு வகுப்பு
மீண்டும் 'நம்பர் 1' முனைப்பு இனி, ஞாயிறு சிறப்பு வகுப்பு
UPDATED : டிச 25, 2025 10:59 AM
ADDED : டிச 25, 2025 11:06 AM

திருப்பூர் :
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு நெருங்குவதால், அரசு பள்ளிகளில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.
திருப்பூர் கல்வி மாவட்டம், பிளஸ் 2 தேர்வில், கடந்தாண்டு, 97.53 சதவீத தேர்ச்சி பெற்று, மாநிலத்தில், மூன்றாமிடமும், பத்தாம் வகுப்பில், 94.84 சதவீத தேர்ச்சி பெற்று, 17வது இடமும் பெற்றது. பிளஸ் 2 தேர்ச்சியில் முந்தைய (2024) ஆண்டு முதலிடத்தில் இருந்த திருப்பூர், மூன்றாமிடம் பெற்றது. பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், நான்கு இடங்கள் முன்னேறினாலும், முதல், 15 இடங்களுக்குள் வர முடியவில்லை.
நடப்பாண்டு முதலிடத்தை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் மாவட்ட கல்வித்துறை தீவிரமாக களமிறங்கி உள்ளது. நடப்பு கல்வியாண்டுக்கான, பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ம் தேதியும் துவங்குகிறது. கற்றலில் பின்தங்கியுள்ள மாணவ, மாணவியருக்கான சிறப்பு வகுப்புகள் துவங்கி நடந்து வருகிறது.
பள்ளி நாட்களில், காலை, மாலை சிறப்பு வகுப்புகள் நடந்து வந்த நிலையில், நடப்பு வாரம் முதல் அரசு பள்ளிகளில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வகுப்புகளும் துவங்கப்பட்டுள்ளன. இதில், அனைத்து மாணவ, மாணவியரும் முழுமையான தேர்ச்சி பெற செய்வதற்கு குறைந்தபட்ச பாடத்திட்டம் தேர்வு செய்யப்பட்டு, வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
'நல்ல பசங்க'
பொதுத்தேர்வுக்கு முன்கூட்டியே சிறப்பு வகுப்பு துவங்க நஞ்சப்பா பள்ளி முன்னோடியாக களமிறங்கியது. சிலர் மாணவர்களை தவறாக வழிநடத்தி, பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக போராட தயார்படுத்தினர். நவ. 19ல் போராட்டமும் நடந்தது. மாணவர்கள் சிறப்பு வகுப்புகளை புறக்கணித்தனர். இந்நிலையில் போலீசார், சமூக, தன்னார்வ, பொதுநல அமைப்புகள் உதவியுடன் மாணவர்களுக்கு நன்னெறி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பெற்றோர் - ஆசிரியர் - மாணவர் சந்திப்பு கூட்டம் நடத்தி, சிறப்பு வகுப்பு, தேர்ச்சி சதவீதம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதன் பலனாக, ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வகுப்பு நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் துவங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (நேற்று முன்தினம்) நடந்த வகுப்பில், 250க்கும் அதிகமான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
பெற்றோர் ஒத்துழைப்பு தேவை
ஒவ்வொரு பள்ளியிலும் பாட வாரியாக தேர்ச்சி சதவீதம், காலாண்டு தேர்வில் மாணவ, மாணவியர் பெற்ற மதிப்பெண் கருத்தில் கொண்டு பள்ளி அளவில் தலைமை ஆசிரியர் தலைமையில் சிறப்பு வகுப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மொழித்தாள், அறிவியல், கணிதம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கு தனித்தனி கால அட்டவணை தயாரிக்கப்பட்டு, சிறப்பு வகுப்பு தொடர உத்தரவிடப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புக்கு பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாள் கூறி உள்ளார்.

