UPDATED : ஆக 26, 2024 12:00 AM
ADDED : ஆக 26, 2024 10:36 AM

பழனி:
பழனியில் நடந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில், 1,500க்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், 285 கட்டுரைகள் தேர்வாகி உள்ளன.
மாநாட்டில், தமிழகம், வெளிமாநிலம், இங்கிலாந்து, துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அறிஞர்கள், ஆய்வாளர்கள் வாயிலாக, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் முருகன், நவ பாஷாண முருகன், அழகன் முருகன், பாதயாத்திரையில் முருகன், தமிழ்க் கடவுள் முருகன், முருகனும் முத்தமிழும் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், முருகன் சம்பந்தமான, 1,500 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
ஆய்வுக் கட்டுரைகள் குறித்து விவாதிக்க வாரியார் அரங்கம், பாம்பன் சுவாமிகள் அரங்கம், வண்ண சரபம் தண்டபாணி சுவாமிகள் அரங்கம் உட்பட ஐந்து ஆய்வு அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த அரங்கங்களில் நெறியாளர்களாக ஆதீனங்கள், கல்லுாரி பேராசிரியர்கள், தமிழ் வளர்ச்சிக் கழக இயக்குனர்கள் உட்பட பலர் செயல்பட்டனர். இவர்கள் முன் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. 285 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன. சமர்ப்பித்தவர்கள் மாநாட்டில் கவுரவிக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளை தொகுத்து, மலராக வெளியிடவும் முடிவு செய்துள்ளனர்.