எழுத்தாளர்களை போற்றும் சமூகமே உயர்ந்தது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
எழுத்தாளர்களை போற்றும் சமூகமே உயர்ந்தது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
UPDATED : ஜூன் 29, 2025 12:00 AM
ADDED : ஜூன் 29, 2025 01:24 PM
சென்னை:
படைப்பாளிகளை அவர்கள் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும். எழுத்தாளர்களை போற்றும் சமூகமே உயர்ந்த சமூகமாக இருக்க முடியும் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சாகித்ய அகாடமி மற்றும் புதுடில்லி ஜே.என்.யு., எனப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலையின் தமிழ் துறை இணைந்து, கருணாநிதி நுாற்றாண்டு கருத்தரங்கை சென்னையில் நடத்தின.
கருத்தரங்கை துவக்கி வைத்து, முத்தமிழறிஞர் கலைஞரின் இலக்கிய ஆளுமை என்ற புத்தகத்தை வெளியிட்டு, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
கருணாநிதி தன் வாழ்நாளில் 80 ஆண்டுகளை, பொது வாழ்க்கைக்கு ஒப்படைத்தவர்.
நுாற்றாண்டு விழா
தன் வாழ்வை தமிழ் சமூகத்தின் உயர்வுக்காக, மேம்பாட்டுக்காக அர்ப்பணித்ததால் தான், அவரால் ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருக்க முடிந்தது. தொட்ட துறைகள் எல்லாவற்றிலும் கோலோச்சியவர். இலக்கியத்தை இளைப்பாறும் நிழலாக கருதினார்.
இலக்கியத்தின் வழியாக இந்தியர்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் மகத்தான பணியை சாகித்ய அகாடமி செய்து வருகிறது. ஒருவரின் இலக்கிய தகுதிக்கு, சாகித்ய அகாடமி தான் அளவுகோல் எனும் அளவிற்கு புகழோடு செயல்பட்டு வருகிறது.
எழுத்தாளர்களையும், மொழிபெயர்ப்பாளர்களையும் ஊக்குவிக்கும் சாகித்ய அகாடமியின் பணி மகத்தானது. ஜே.என்.யு.,வுடன் இணைந்து, கருணாநிதி நுாற்றாண்டு விழாவை சாகித்ய அகாடமி கொண்டாடுவது சிறப்புக்குரியது.
இந்த பல்கலையில், கருணாநிதி தான், தமிழுக்கென தனி இருக்கையை அமைத்தார். பின், 15 ஆண்டுகள் கழித்து, அந்த இருக்கையை தனி ஒரு துறையாக வளர்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அந்த வகையில், தமிழ் இலக்கியவியல் என்ற தனி துறையை உருவாக்க, 5.30 கோடி ரூபாய் வழங்கினோம். பல்கலையில் உள்ள பன்னோக்கு கலையரங்கம் அருகே, திருவள்ளுவரின் சிலை நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாரத ரத்னா
சாகித்ய அகாடமியும், ஜே.என்.யு.,வும் இணைந்து நடத்தும் இந்த விழா, கருணாநிதியை இந்திய இலக்கிய முகமாக அங்கீகரிக்கும் நாளாக அமைந்துள்ளது.
சாகித்ய அகாடமி விருது பெறும் படைப்பாளர்களுக்கு, கனவு இல்லம் திட்டம் வாயிலாக, இதுவரை 15 அறிஞர்களுக்கும், 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கும் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்நோக்கம், படைப்பாளிகள் வாழும் காலத்திலேயே, அவர்களை போற்ற வேண்டும் என்பது தான். எழுத்தாளர்களை போற்றும் சமூகம் தான் உயர்ந்த சமூகமாக இருக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கவிஞர் வைரமுத்து பேசியதாவது:
கருணாநிதிக்கு, சாகித்ய அகாடமி விருது, ஞானபீடம் விருது வழங்கப்படவில்லை. உயிரோடு வாழுபவர்களுக்கே இந்த விருதுகள் வழங்க முடியும் என்கின்றனர். பாரத ரத்னா விருது வழங்க, அந்த விதிமுறை இல்லை. எனவே, கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், சாகித்ய அகாடமி செயலர் ஸ்ரீனிவாசராவ், ஜே.என்.யு., பல்கலை துணை வேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட், அமைச்சர்கள் சாமிநாதன், சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.