நெருக்கடிகளை தாண்டி சாதித்த மாணவன்: முதல்வர் பாராட்டு
நெருக்கடிகளை தாண்டி சாதித்த மாணவன்: முதல்வர் பாராட்டு
UPDATED : மே 09, 2024 12:00 AM
ADDED : மே 09, 2024 11:10 PM
சென்னை:
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற, நாங்குநேரியில் ஜாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவன் சின்னதுரை, சென்னையை சேர்ந்த திருநங்கை நிவேதா ஆகியோரை அழைத்து, முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் முனியாண்டி. கூலித் தொழிலாளி. இவர்களின் மகன் சின்னதுரை, 17, வள்ளியூரில் உள்ள பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார். அவரது தங்கையும் அதே பள்ளியில் படித்து வந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம், அப்பள்ளியில் படித்த வேறு சமுதாய மாணவர்கள் சிலர், சின்னதுரையை அவரது வீட்டிற்குள் புகுந்து, அரிவாளால் வெட்டினர். தடுக்க முயன்ற தங்கையையும் வெட்டினர். பலத்த காயமடைந்த இருவரும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
குணமடைந்த சின்னதுரை, மீண்டும் பள்ளி சென்று படித்தார். பிளஸ் 2 தேர்வில், 600க்கு 469 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.
பிளஸ் 2 தேர்வு எழுதிய, சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த, திருநங்கை நிவேதா, 289 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். அவர்கள் இருவரும் நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது, அமைச்சர் மகேஷ், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, பள்ளிக் கல்வித்துறை செயலர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள்உடனிருந்தனர்.
ஒற்றுமை அவசியம்
மாணவன் சின்னத்துரை கூறுகையில், முதல்வர் உத்தரவால் சிறப்பான சிகிச்சை பெற்றேன்; குணமடைந்து பள்ளி சென்றேன். அதிக மதிப்பெண் பெற்றேன். முதல்வரும், அமைச்சரும் வாழ்த்து தெரிவித்தனர். மேற்படிப்பு படிக்க உதவி செய்வதாகவும், படிப்பு செலவை ஏற்பதாகவும் கூறினர்.
நான் பி.காம்., முடித்து, சி.ஏ., படிக்க விரும்புகிறேன். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது. என்னை தாக்கிய மாணவர்களும் நன்கு படிக்க வேண்டும். இது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடக்கூடாது. நான் தாக்கப்படாமல் இருந்தால், இன்னும் கூடுதல் மதிப்பெண் பெற்றிருப்பேன், என்றார்.