நீட் தேர்வை சரியாக எழுதாததால் நாடு முழுதும் சுற்றி திரிந்த மாணவன்
நீட் தேர்வை சரியாக எழுதாததால் நாடு முழுதும் சுற்றி திரிந்த மாணவன்
UPDATED : ஜூன் 03, 2024 12:00 AM
ADDED : ஜூன் 03, 2024 10:04 PM
கோட்டா:
நீட் தேர்வை சரியாக எழுதாத காரணத்தால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவர், காஷ்மீர் முதல் ராமேஸ்வரம் வரை கோவில் கோவிலாக ஏறி இறங்கியுள்ளார். அவரை பெற்றோர் கண்டுபிடித்து அழைத்து வந்தனர்.
வெளியேறினார்
ராஜஸ்தான் மாநிலம், கங்காபூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் மீனா, 19. இவர் நீட் பயிற்சி மையங்களுக்கு புகழ்பெற்ற கோட்டாவில் தங்கி கடந்த மூன்று ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு படித்து வந்தார்.
இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதிய அவர், போதிய மதிப்பெண் கிடைக்காது என்ற அச்சத்தில், தேர்வு நடந்த அடுத்த நாளான மே 6ல் வீட்டை விட்டு வெளியேறினார். இது குறித்து தன் பெற்றோருக்கு குறுஞ்செய்தியில் தகவல் தெரிவித்தார்.
அதில், நான் மேற்கொண்டு படிக்க விரும்பவில்லை. அதற்காக தவறான முடிவு எதுவும் எடுக்க மாட்டேன். ஐந்து ஆண்டுகளுக்கு வீட்டை விட்டு விலகி இருக்க போகிறேன். கையில் 8,000 ரூபாய் உள்ளது. தேவையெனில் தொடர்பு கொள்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து ராஜேந்திர பிரசாத்தின் தந்தை ஜகதிஷ் பிரசாத் கோட்டா போலீசில் புகாரளித்தார். குடும்பத்தினரும் மூன்று குழுவாக பிரிந்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த மே 29ல் கோவாவில் உள்ள மட்கோவன் ரயில் நிலையத்தில், மாணவர் ராஜேந்திர பிரசாத்தை அவரது தந்தை கண்டுபிடித்தார்.
புனே சென்றார்
இது குறித்து அவர் தந்தை ஜகதிஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோட்டா போலீசார் காணாமல் போன என் மகனை கண்டுபிடிக்க எந்த முயற்சியும் எடுக்காமல் அலட்சியம் காட்டினர். அதனால் குடும்பத்தினர் நாங்களே முயற்சித்து மகனை கண்டுபிடித்தோம்.
நீட் தேர்வில் போதிய மதிப்பெண் கிடைக்காது என்ற அச்சத்தில் ராஜேந்திர பிரசாத் வீட்டை விட்டு வெளியேறினார். தன்னை கண்டுபிடிக்க கூடாது என்பதற்காக சிம் கார்டை உடைத்துப் போட்டுவிட்டு, மொபைல் போனை விற்றுவிட்டு, முதலில் புனேவுக்கு ரயிலில் சென்றுள்ளார்.
பின் அங்கிருந்து அமிர்தசரஸ் பொற்கோவில், ஜம்மு- வைஷ்ணவ தேவி கோவில், ஆக்ராவில் உள்ள தாஜ்மகால், ஒடிசாவில் உள்ள புரி ஜெகன்நாதர் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம் என சுற்றியுள்ளார். கோவாவுக்கு வந்த போது அவரை கண்டுபிடித்தோம்.
முன்பதிவு இல்லாத பெட்டியில் டிக்கெட் இல்லாமல், 23 நாட்கள் நாடு முழுதும் சுற்றி வந்து உள்ளார். தற்போது அவரை வீட்டுக்கு அழைத்து வந்து, என்ன விருப்பமோ, அதை செய்யும்படி அறிவுறுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.