புதுமையான சிந்தனைக்கு காத்திருக்கும் சிம்மாசனம்; டி.ஆர்.டி.ஓ., மூத்த விஞ்ஞானி டில்லிபாபு பேச்சு
புதுமையான சிந்தனைக்கு காத்திருக்கும் சிம்மாசனம்; டி.ஆர்.டி.ஓ., மூத்த விஞ்ஞானி டில்லிபாபு பேச்சு
UPDATED : ஆக 01, 2024 12:00 AM
ADDED : ஆக 01, 2024 10:38 AM

திருப்பூர்:
புதுமையான சிந்தனையாளர்களுக்கு இந்த உலகில் நிறைய வாய்ப்புகள் காத்திருக்கிறது என இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டி.ஆர்.டி.ஓ.,,) மூத்த விஞ்ஞானி டில்லிபாபு பேசினார்.
திருப்பூர் ஏ.வி.பி., டிரஸ்ட் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவு நாளையொட்டி, நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன மூத்த விஞ்ஞானி டில்லிபாபு பேசியதாவது:
உலகின் உயரமான போர்க்களமாக உள்ள சியாச்சின் பனி மலையில், மைனஸ் - 60 டிகிரி குளிர் நிலவுகிறது. இமய மலையில், மைனஸ் - 10 டிகிரி குளிர் நிலவுகிறது. இந்த கடுங்குளிரில் ஒரு நாள் தங்குவதே, மிகச்சிரமமான காரியம். ஆனால், நம் நாட்டை காக்கும் ராணுவ வீரர்கள், நம் நாட்டின் பாதுகாப்புக்காக தொடர்ந்து அங்கு காவல் காக்கின்றனர். நாட்டின் ஒரு மி.மீ., நிலம் கூட அண்டை நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து, செயல்படுகின்றனர்.
வீரர்களுக்கு இயற்கை உபாதை கழிப்பது மிகப்பெரும் பிரச்னையாக இருந்தது; அங்கு தேங்கும் மனித கழிவுகளை அகற்றுவது பெரும் சவாலாக இருந்தது. எங்கள் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், உயிரி கழிப்பறையை தயாரித்து, பயன்பாட்டுக்கு வழங்கினோம். இதனால், அந்த சவாலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தை ரயில்வே துறையும் பயன்படுத்திக் கொள்ள விரும்பியது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும், ரயில்வே துறையும் இணைந்து, தற்போது புதிதாக வடிவமைக்கும் ரயில் பெட்டிகளில், உயிரிக்கழிப்பறைகளை அமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளன. இதனால், 'திறந்தவெளியில் மலம்' என்ற பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
கல்வி பயின்றால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்; ஆங்கிலம் பயின்றால், வேலை வாய்ப்பு எளிதாகும். உயர்கல்வி படித்தால், எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்றெல்லாம் சொல்வார்கள். இதையெல்லாம் கடந்து, புதுமையான சிந்தனையை வளர்ப்பதன் வாயிலாக தான் சாதிக்க முடியும்.
ஒரு பிரச்னைக்கான நீடித்த நிலைத்த தீர்வை பெற முடியும் என்ற சிந்தனையை விதைத்தவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம். புதுமை சிந்தனையாளர்களை இந்த உலகம், சிம்மாசனம் போட்டு வரவேற்கிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.