ஆங்கிலேயர் நினைவாக பல்கலையா? பெயரை மாற்ற மத்திய அமைச்சர் யோசனை
ஆங்கிலேயர் நினைவாக பல்கலையா? பெயரை மாற்ற மத்திய அமைச்சர் யோசனை
UPDATED : செப் 03, 2024 12:00 AM
ADDED : செப் 03, 2024 12:47 PM
புவனேஸ்வர்:
ஆங்கிலேயர் நினைவாக உள்ள பல்கலையின் பெயரை மாற்றுவது குறித்து யோசிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இதற்கு அங்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
ஒடிசாவின் கட்டாக் நகரில் 1868 ம் ஆண்டு , ஒடிசாவை நிர்வகித்த தாமஸ் எட்வர்ட் ராவேன்ஷா கல்லூரி ஒன்றை உருவாக்கினார். இக்கல்லூரிக்கு அவரின் நினைவாக ராவேன்ஷா என பெயர் சூட்டப்பட்டது. 2006 ம் ஆண்டு பல்கலையாக இது தரம் உயர்ந்தது. இங்கு தற்போது 8 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இக்கல்லூரி உருவாவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்(1866) அம்மாநிலத்தை பஞ்சம் ஆட்டிப்படைத்தது. அதில், பல லட்சம் பேர் உயிரிழந்தனர். அப்போது அம்மாநிலத்தை ராவேன்ஷா தான் நிர்வகித்து வந்தார்.
இந்நிலையில் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:
ராவேன்ஷா பல்கலையின் பெயரை மாற்ற வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. அவரது ஆட்சி காலத்தில் தான் பஞ்சம் ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அப்போது அவரது நிர்வாகத்தில் இருந்தவர்கள் என்ன செய்தனர்?. ஒடிசா மக்களுக்கு ஏற்பட்ட துயரத்திற்கு காரணமானவர்களை போற்றுவது நமக்கு பெருமை அளிக்குமா? பல்கலை பெயரை மாற்றுவது குறித்து கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக அப்பல்கலையில் படித்தவரும் ஒடிசா முன்னாள் தலைமை செயலாளருமான சாஹாதேப் சாஹூ கூறியதாவது:
இக்கல்வி நிறுவனத்தை தோற்றுவித்து ஒடிசாவிற்கு ராவேன்ஷா நன்மை செய்துள்ளார். அக்கால கட்டத்தில் ஒடியா மொழி தனது அடையாளத்தை இழந்து போராடி கொண்டு இருந்தது. உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அவர் ஆற்றிய பணியை நினைவுகூர்ந்து, கல்லூரிக்கு ராவேன்ஷா பெயர் சூட்டப்பட்டது. ஒடிசா மக்களுக்கு ஏற்பட்ட துயரத்திற்கு அவர் காரணமல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
சத்யாகாம் மிஸ்ரா என்ற கல்வியாளர் கூறுகையில், ராவேன்ஷாவின் பங்களிப்பு பற்றி அறிந்தவர்கள் கல்லூரியின் பெயரை மாற்ற மாட்டார்கள். ஒடியா மொழியை இன்று நமது மாணவர்கள் பேசுகிறார்கள் என்றால், அதற்கு ஆங்கிலேய அதிகாரி தான் காரணம், என்றார்.