UPDATED : ஜூன் 12, 2024 12:00 AM
ADDED : ஜூன் 12, 2024 07:54 AM

பொள்ளாச்சி:
பள்ளி மாணவர்களுக்கு அலைச்சலை தவிர்க்கும் வகையில், பள்ளிகளில் ஆதார் பதிவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளி குழந்தைகளுக்கு, பள்ளிகளிலேயே ஆதார் பதிவு செய்தல் மற்றும் மேம்படுத்தல் திட்டமானது, பள்ளி கல்வித்துறையால் இந்தாண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. ரேஷன் கார்டு முதல் அனைத்துக்கும் ஆதார் கார்டு அவசியமாகியுள்ளது.
அதில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்யப்படுகிறது. அதன் பின், ஐந்து வயது முடிந்த பிறகும் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், 10, 15, 18 வயது மற்றும், 22 வயது ஆகிய கால இடைவெளிகளில் கைவிரல் ரேகை மற்றும் விழித்திரை மறுபதிவு செய்து ஆதாரினை தொடர்ந்து மேம்படுத்துதல் அவசியமாக உள்ளது.
இந்த மறுபதிவு மேம்பாட்டுக்காக பெற்றோர், குழந்தைகளை அழைத்துக்கொண்டு, தாலுகா அலுவலகம், தபால் அலுவலகங்கள், குறிப்பிட்ட சில வங்கிகளில் உள்ள ஆதார் பதிவு சேவைகளை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றனர்.
ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு, டோக்கன் வழங்கி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், கூட்ட நெரிசல் போன்றவற்றால், இரண்டு நாட்களுக்கு மேலாக குழந்தைகளை அழைத்துச் செல்லும் நிலை நீடிக்கிறது. இப்பணிக்காக அவர்களை அழைத்துச் செல்வதால், அவர்கள் கல்வி கற்பது, வகுப்புகளும் பாதிக்கப்படுகின்றன.
இதுபோன்ற பிரச்னைகளை களையும் வகையில், பள்ளி கல்வித்துறை, பள்ளிகளில் ஆதார் பதிவு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், பயிலும் பள்ளிகளிலேயே ஆதார் பதிவு செய்யும் சேவையை பள்ளி கல்வித்துறை, தமிழ்நாடு தொழில்நுட்ப நிறுவனமாகிய, 'எல்காட்' உடன் இணைந்து, 'பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இப்பணிகள், நடப்பு கல்வியாண்டு முதல் நாளில் இப்பணி நேற்று துவங்கப்பட்டுள்ளது. ஆதார் பதிவுகளை புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், ஜமீன் முத்துார், தெற்கு ஒன்றியத்தில் சூளேஸ்வரன்பட்டி, மாக்கினாம்பட்டி ஊராட்சி பள்ளிகளில் ஆதார் முகாம் நடந்தது. ஆனைமலை அருகே அங்கலகுறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், அரசு பள்ளிகளில் தினசரி ஆதார் முகாம் என்ற பெயரில் ஆதார் பதிவு துவக்கி வைக்கப்பட்டது.
பள்ளியின் தலைமையாசிரியர் ஜோதிமல்லிகா முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் செல்வமணி, முகாமினை துவக்கி வைத்தார். வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன், ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆதார் பதிவானது ஆதார் சேவை பதிவாளர் சிவப்பிரியா மற்றும் குழுவினர் ஒன்றியம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு பதிவு மேற்கொண்டுள்ளனர்.
ஆசிரியர் பயிற்றுநர்கள் கூறுகையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் இந்த முகாம் நடத்தப்படுகிறது. இதற்காக தேதி ஒதுக்கீடு செய்து முகாம் நடத்தப்படும்.
எமிஸ் பதிவு, மாணவர்களுக்கான உதவித்தொகை வங்கியில் செலுத்த வங்கி கணக்கு துவங்குவதற்கு ஆதார் பயன்படுத்துவதால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.
6,25,467 மாணவர்கள் பயன்பெறுவர்!
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில், பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு சிறப்பு முகாம் துவங்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக தமிழ்நாடு மின்னணு நிறுவனம், 37 ஆதார் கருவிகளை கொண்டு புதிய ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, 34 தரவு உள்ளீட்டார்களை நியமித்துள்ளது.கோவை மாவட்டத்தில், 15 வட்டார வள மையங்களில் இப்பணி துவங்கப்பட்டுள்ளது. ஆதார் புதுப்பித்தல் கட்டணமின்றி, 5 - 7 வயது வரையில் உள்ள, 1,20,044 மாணவர்கள் பயன்பெறுவர்; 15 - 17 வயது வரையிலான, 1,30,669 மாணவர்கள் பயன்பெறுவர்.14 வயது உள்ள அனைத்து மாணவர்களுக்கு ஆதார் புதுப்பித்தல், அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் இன்றியும், தனியார் பள்ளி மாணவ, மாணவியருக்கு, UIDAI கட்டணம் பெறப்படும். இதனால், 6,25,467 மாணவர்கள் மொத்தமாக பயன்பெறுவர்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.