பள்ளி மாணவர்களுக்கு ஆதார் புதுப்பித்தல்; இம்முறை கட்டணம் வசூலிப்பதாக புகார்
பள்ளி மாணவர்களுக்கு ஆதார் புதுப்பித்தல்; இம்முறை கட்டணம் வசூலிப்பதாக புகார்
UPDATED : அக் 01, 2025 10:17 AM
ADDED : அக் 01, 2025 10:18 AM

கோவை:
அரசு பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, ஆதார் விபரங்களை புதுப்பிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு, இப்பணிகளை அஞ்சல் துறை மூலம் மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு இலவசமாக வழங்கப்பட்ட இச்சேவைக்கு, தற்போது கட்டணம் வசூலிப்பதாக, புகார் எழுந்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்படுகின்றன. இத்தொகைகள், மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்படுவதால், அனைத்து மாணவர்களும் தங்களது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து, பயோமெட்ரிக் விபரங்களைப் புதுப்பிப்பது அவசியமாகியுள்ளது.
கடந்தாண்டு, 'பள்ளியிலேயே ஆதார்' திட்டத்தின் கீழ், 'எல்காட்' நிறுவனம் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆதார் புதுப்பிக்கும் பணி இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. இந்தாண்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், அஞ்சல் துறையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் டிச. மாதத்துக்குள் ஆதார் புதுப்பித்தல் பணிகளை முடிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 5 முதல் 7 வயது (முதல்முறை ஆதார் எண் பெறுவது) மற்றும் 15 முதல் 17 வயது வரையிலான மாணவர்களுக்கு, பயோமெட்ரிக் புதுப்பித்தல் சேவையை, அஞ்சல் துறை இலவசமாக செய்து வருகிறது. மற்றவர்களுக்கு பெயர், முகவரி போன்ற இதர திருத்தங்களுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை கட்டணம் வசூலிப்பது, பெற்றோர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, அஞ்சல் துறையுடன் போட்ட ஒப்பந்தம் வாயிலாக, பணி மேற்கொள்ளப்படுகிறது. எல்காட் நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு இலவசமாக ஆதார் புதுப்பிக்கும் பணி விரைவில் துவக்கப்படும்' என்றார்.