மாணவியருக்கு பாலியல் தொல்லை: தலைமறைவு டில்லி சாமியார் கைது
மாணவியருக்கு பாலியல் தொல்லை: தலைமறைவு டில்லி சாமியார் கைது
UPDATED : செப் 29, 2025 10:48 AM
ADDED : செப் 29, 2025 10:51 AM
ஆக்ரா:
டில்லியில், தனியார் கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், தலைமறைவாக இருந்த சாமியார் சைதன்யானந்த சரஸ்வதியை, உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் போலீசார் நேற்று கைது செய்தனர்.
தலைநகர் டில்லியில் உள்ள வசந்த் கஞ்ச் பகுதியில், 'ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மேனேஜ்மென்ட்' என்ற உயர்கல்வி நிறுவனம் செயல்படுகிறது.
நிரூபணம்
கர்நாடக மாநிலம் சிருங்கேரி சாரதா பீடத்தின் தலைமையில் இயங்கும் இந்த நிறுவனத்தில், டில்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவியர் படிக்கின்றனர்.
இங்கு மாணவியர் சிலருக்கு, கல்வி நிறுவனத்தின் மேலாளராக இருந்த சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி, பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட ஒரு மாணவி மற்றும் விமானப்படை அதிகாரி ஒருவர் எழுதிய கடிதத்தால், இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இது தொடர்பாக, கல்லுாரியில் படிக்கும் மாணவியரிடம், சிருங்கேரி சாரதா பீடத்தின் அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தியதில், சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி பாலியல் தொல்லை அளித்தது நிரூபணமானது.
இது குறித்து டில்லி போலீசார் பாலியல் வழக்கு பதிவு செய்த நிலையில், சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி தலைமறைவானார். கடந்த வாரம், முன்ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை டில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
போலீஸ் காவல்
இந்நிலையில், மாணவியருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், உ.பி.,யின் ஆக்ராவில் பதுங்கியிருந்த சாமியார் சைதன்யானந்த சரஸ்வதியை, டில்லி போலீசார் நேற்று கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
போலி பாஸ்போர்ட்
பாலியல் வழக்கில் கைதான சாமியார் சைதன்யானந்த சரஸ்வதியிடம், போலி 'விசிட்டிங் கார்டு'கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஐ.நா., நிரந்தர துாதர் என்றும், 'பிரிக்ஸ்' கூட்டமைப்புக்கான இந்தியாவின் சிறப்பு துாதர் என்றும் அந்த கார்டுகளில் தகவல்கள் இருந்தன. மேலும், பிரதமர் அலுவலகத்துடன் நேரடி தொடர்பு இருப்பதாகவும் கூறி, அவர் பல மோசடிகளை செய்துள்ளதாக போலீசார் குறிப்பிட்டனர். இதைத் தவிர, போலி பாஸ்போர்ட்டும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.