UPDATED : ஏப் 26, 2024 12:00 AM
ADDED : ஏப் 26, 2024 05:20 PM

திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் மூன்று இளம்பெண் ஊழியர்கள், குரூப்-1 போட்டி தேர்வில் வெற்றி பெற்று, அதிகாரிகள் அந்தஸ்துக்கு பதவி உயர்வு பெற உள்ளனர்.
குரூப் -1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பணிபரியும் 3 இளம்பெண் ஊழியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதிகாரிகள் அந்தஸ்துக்கு உயர்கின்றனர்.
உதவி கலெக்டராக களமிறங்கும் நித்யா
ஈரோடு மாவட்டம் பெருந்துறை துடுப்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் நித்யா 26. பி.எஸ்சி., வேளாண்மை படித்தவர். குரூப் - 2 தேர்வில் தேர்ச்சி பெற்று வேளாண்மை அலுவலராக பணியாற்றி வருகிறார்.
தற்போது திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் துறை பிரிவில் பணிபுரிகிறார். குரூப் 1 தேர்வெழுதி, 10வது இடம் பிடித்து உதவி கலெக்டராக பொறுப்பேற்க உள்ளார்.அவர் கூறுகையில், கடந்த 2019ல் கல்லுாரி முடித்தவுடன் போட்டி தேர்வுக்கு படிக்க துவங்கி விட்டேன். அதன் விளைவாக குரூப் - 2 தேர்வில் வெற்றி பெற்றேன். பின் குரூப் - 1 தேர்வுக்கு தயாரானேன். மெயின்ஸ் தேர்வுக்கு, கோவையில் உள்ள பயிற்சி மையத்துக்கு சென்று படித்தேன்; வெற்றி கிடைத்தது. இது எனது இரண்டாவது முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றார்.
விடாமுயற்சியுடன் வென்ற சுபாஷினி
ஈரோடு மாவட்டம் நம்பியூர் சின்ன செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சுபாஷினி 26. கடந்த 2020ல் குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று கூட்டுறவு துறையில் முதுகலை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். குரூப் - 1 தேர்வெழுதி மாநில அளவில், 49வது இடம் பிடித்து கூட்டுறவு துறையிலேயே துணைப்பதிவாளர் பதவிக்கு தேர்வாகிறார்.சுபாஷினி கூறுகையில், வேலைக்கு சென்று வந்து எஞ்சிய நேரத்தில் படித்தேன்; வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷ் உள்ளிட்டோர் அளித்த ஊக்கம், பயனளித்தது. குரூப் - 1 தேர்வு சற்று கடினம் தான்; ஒரு மாத காலம் கோவையில் உள்ள பயிற்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெற்றேன். என், 3வது முயற்சியில் தான் இந்த வெற்றி கிடைத்தது. போட்டி தேர்வில் சாதிக்க விடா முயற்சி, பயிற்சி அவசியம் என்றார்.
களப்பணிக்கிடையே சாதித்த இந்திரா
உடுமலையை சேர்ந்தவர் இந்திரா பிரியதர்ஷினி 28. பி.எஸ்.சி., வேளாண்மை படித்தவர். போட்டி தேர்வு வாயிலாக கடந்த 2019ல் மடத்துக்குளத்தில் வேளாண்மை அலுவலராக பணியில் சேர்ந்தார். தற்போது திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிகிறார். குரூப் - 1 தேர்வெழுதி மாநில அளவில், 35வது இடம் பிடித்து வணிக வரித்துறையில் உதவி ஆணையராக பொறுப்பேற்க உள்ளார். அவர் கூறுகையில், வேளாண்மை அலுவலராக இருந்ததால் பல்வேறு பகுதிகளுக்கு களப்பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்ப தாமதமாகும். இருப்பினும் கிடைக்கும் நேரத்தில் குரூப் - 1 தேர்வுக்கு படித்தேன். 2வது முயற்சியில் எதிர்பார்த்த வெற்றி கிடைத்தது. மெயின்ஸ் தேர்வுக்கு பயிற்சி மையம் சென்று படிப்பது பலன் தரும் என்றார்.