UPDATED : ஏப் 29, 2024 12:00 AM
ADDED : ஏப் 29, 2024 10:34 AM

கோவை:
கோடை விடுமுறை நாள்களில் வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகளை ஏப்.13ம் தேதிக்குள் நடத்தி கோடை விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்., 6ம் தேதி முதலும், 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்., 24 முதலும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் காலை 11 முதல் மாலை 4 மணி வரையில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில், பல தனியார் பள்ளிகளில் இதுவரை விடுமுறை வழங்காமல் மாணவர்களை அலைக்கழித்து வருவதாகவும், இதனால் மாணவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இளைஞர்கள் மற்றும் பெரியவர்களாலேயே தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு வெயில் கொளுத்தி வரும் நிலையில், கோடை விடுமுறையிலும் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பது அவர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துவதோடு, கடும் சிரமத்தையும் ஏற்படுத்தும்.
எனவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்காத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி கூறியதாவது:
மாநில பாடத் திட்டத்தைப் பின்பற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை துவங்கியுள்ளது. சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. பாடத் திட்டத்தைப் பின்பற்றும் சில தனியார் பள்ளிகள் மட்டும் இயங்கி வருகின்றன.
இப்பள்ளிகளுக்கும் பாடத்திட்டத்தை விரைவில் முடித்து விடுமுறை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறி செயல்படும் பள்ளிகள் குறித்து புகார் கிடைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.