கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் முதல்வர் ரங்கசாமி தகவல்
கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் முதல்வர் ரங்கசாமி தகவல்
UPDATED : செப் 06, 2026 03:10 PM
ADDED : செப் 06, 2026 03:13 PM
புதுச்சேரி:
புதுச்சேரி பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில், ஆசிரியர் தினவிழா கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டபத்தில் நடந்தது.
விழாவில் முதல்வர் ரங்கசாமி நல்லாசிரியர் விருது வழங்கி பேசியதாவது:
எழுத்தறிவை கொடுக்கும் ஆசிரியர்கள் இறைவனுக்கு நிகரானவர்கள். குழந்தைகள் சிறு வயதில் படிக்க வரும் போது, நல்ல சிந்தனை உடையவர்களாக வருகிறார்கள். அவர்களை நல்ல மனிதனாக உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது.
புதுச்சேரி 100 சதவீதம் கல்வி அறிவு பெற்ற மாநிலமாக திகழ்கிறது. புதுச்சேரியில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். நமது அரசு பொறுப்பேற்ற பின் ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. கூடுதலாக ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்பப்படும்.
அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை அமல்படுத்தும் போது பல எதிர்ப்புகள் கிளம்பியது. தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் உதவுகிறது. தற்போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று வருகிறார்கள். கடந்தாண்டு அரசு பள்ளியில் படித்த 37 மாணவ, மாணவிகள் 10 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்தார்கள். அவர்களுக்கான முழு கல்வி கட்டணத்தையும் அரசே செலுத்துகிறது.
அரசு பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மத்திய அரசிடம் பல்வேறு விருதுகளை வாங்கி வருகிறார்கள். தற்போது அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ளது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
புதிய தொழில்நுட்பத்தின் வாயிலாக மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும். பள்ளி கல்வி மிகவும் முக்கியமான ஒன்று. அப்போது தான் உயர்கல்வியில் நல்ல கல்லுாரியில் இடம் கிடைக்கும். நிர்வாகத்தில் சிறு, சிறு குறைகள் இருக்கும். அவற்றை சரிசெய்வதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தும். ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றி மேலும் பல விருதுகளை பெற வேண்டும்' என்றார்.
