UPDATED : ஆக 02, 2025 12:00 AM
ADDED : ஆக 02, 2025 08:28 AM

சென்னை:
ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆசிரியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முதல் கருப்பு, பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்லும் போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி சபாபதி கூறியதாவது:
ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் நலன் சார்ந்து, கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கிய கோரிக்கை மனு மீது, இதுவரை துறை சார்பில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை.
சில கோரிக்கைகளுக்கு அமைச்சர் உத்தரவு அளித்தும், துறை அதிகாரிகள் செயல்படுத்த முன்வரவில்லை. இவர்களின் அலட்சிய போக்கால், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில், 2,000 ஆசிரியர், 1,000 சமையலர் மற்றும், 500 விடுதி காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால், பலரும் தங்கள் குழந்தைகளை, இப்பள்ளியில் சேர்க்க முன்வருவதில்லை.
தலைமை ஆசிரியர் முதல் விடுதி காப்பாளர் வரை, காலி பணியிடங்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், நான்கு ஆண்டில் மட்டும் மாணவர் எண்ணிக்கை, 20 சதவீதம் குறைந்துள்ளது.
இதற்கு துறை அதிகாரிகளே காரணம். எனவே, அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து, பள்ளி வேலை நாட்களில், கருப்பு நிற, பேட்ஜ் மற்றும் ஆடை அணிந்து, பணிக்கு செல்ல முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.